Saturday, April 27, 2019

என்னுரை

ஜி.பாலன்
சினிமாத்துறையில் இயக்குநராக வேண்டும் என்கிற பெரிய கனவுகளுடன், நிறைய எதிர்ப்பார்ப்புகளுடன் சென்னை வந்த எனக்கு, இங்கு ஏற்பட்ட அனுபவங்களும், சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களும் அதிகம். அப்படி எனக்குள் நிறைந்து கிடக்கும் அனுபவங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள முகநூல் எனக்கு ஒரு வடிகாலாக அமைந்தது.

ஒவ்வொரு நாளும் எழுத அமரும் போதுதான் அந்தக் கட்டுரைக்கான தகவல்கள் ஞாபகத்திற்கு வந்தன. என் நினைவுகளில் நீந்தி பல நிகழ்வுகளை ஞாபகப்படுத்தி எழுதினேன். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் மக்கள் தொடர்பாளராக சில ஆண்டுகள் வேலை பார்த்திருக்கிறேன். அப்போது நடந்த நிகழ்வுகளை எழுதும் போது அது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க வரலாறாகவும், தலைவர் திரு கே.ஆர்.ஜி. அவர்களின் வரலாறாகவும் அமைந்துள்ளது.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் தலைவர் கே.ஆர்.ஜி. அவர்கள் ஆற்றிய மகத்தான சேவையை யாரும் மறந்துவிட முடியாது. அவருடைய வீர தீரமான செயல்கள் உறுப்பினர்களுக்கும், சங்கத்திற்கும் பயனுள்ளதாக அமைந்தன. அந்த நிகழ்வுகளை மீண்டும் நினைத்து ஞாபகப்படுத்திப் பார்க்கக் கூடிய பதிவாக இந்த கட்டுரைகள் அமைந்துள்ளன.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தை தொடர்ந்து தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் (பிலிம் சேம்பர்) தலைவராகவும் திரு கே.ஆர்.ஜி. அவர்கள் செயலாற்றி உள்ளார். அந்தத் தகவல்களையும், கே.ஆர்.ஜி. அவர்கள் தயாரித்த படங்கள் குறித்த செய்திகள், தகவல்களையும் திரட்டிப் பதிவு செய்துள்ளேன்.

ஒருமுறை ‘தினகரன்’ நாளிதழில் வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அவர்கள் பதில் அளித்தார். அதில் ஒரு வாசகர், ‘உங்களுக்குப் பிடித்த தலைவர் யார்?’ என்கிற கேள்விக்கு, எனக்கு பிடித்த தலைவர் ‘கே.ஆர்.ஜி’ என்று பதில் கூறி இருந்தார்.

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தருக்குப் பிடித்த தலைவர் கே.ஆர்.ஜி. பல தயாரிப்பாளர்களுக்கும் பிடித்த தலைவர் கே.ஆர்.ஜி. அப்படிப்பட்ட தலைவர் கே.ஆர்.ஜியின் சாதனைகளை... வரலாற்றுச் சுவடுகளை... ‘தலைவர் கே.ஆர்.ஜி.’ என்கிற பெயரில் வெளியிடுவதில் பெரும் மகிழ்ச்சி  அடைகிறேன்.

இது ஒரு சிறிய முயற்சிதான்.... தலைவர் கே.ஆர்.ஜி. அவர்களைப் புகழ வேண்டும் என்று வெளியிடவில்லை. நிகழ்வுகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும், ஆவணப்படுத்த வேண்டும் என்கிற முனைப்புதான் இந்த முயற்சி.

வரலாற்றைச் சேமிப்பவர்களையும், வரலாற்றுச் சேமிப்புகளையும் எப்போதும் மதிக்கும் எனது தயாரிப்பாளரும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் கௌரவச் செயலாளருமான  திரு எஸ்.எஸ்.துரைராஜு அவர்கள்,  இந்த பதிவுகளுக்கு அணிந்துரை வழங்கி, எனக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அவருக்கு எனது நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த பதிவுகள் குறித்த விமர்சங்களை திறந்த மனதுடன் வரவேற்கிறேன்.

என்றும் நன்றியுடன்
ஜி.பாலன்

திரைப்பட மக்கள் தொடர்பாளர். 

நன்றி


தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு கே.ஆர்.ஜி. அவர்கள் தலைவராக இருந்த போது, நிறைய உறுப்பினர்கள் அவர் எடுத்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்து உதவியாக இருந்தார்கள். அதனால்தான் சங்கத்தை வலிமையுள்ள சங்கமாக அவரால்  உருவாக்க முடிந்தது.

கே.ஆர்.ஜி. அவர்கள் தலைவராக இருந்த காலத்தில் சி.வி.ஸ்ரீதர், டி.ஆர்.ராமண்ணா, கே.பாலசந்தர், கேயார், பஞ்சு அருணாச்சலம், கலைப்புலி எஸ்.தாணு, இராம.நாராயணன், முக்தா வி.சீனிவாசன், ஆர்.பி.சௌத்திரி, கோவைத்தம்பி, இப்ராகிம் ராவுத்தர், கே.எஸ்.சீனிவாசன், தரங்கை சண்முகம், கே.முரளிதரன், பிரமிட் நடராசன், டி.சிவா, சித்ரா லட்சுமணன், ஏ.எம்.ரத்தினம், ஜி.தியாகராஜன், கே.ராஜன், டி.எஸ்.சேதுராமன், சி.வி.ராஜேந்திரன், டி.என்.ஜானகிராமன், ஏ.எல்.அழகப்பன், ஏ.ஜி.சுப்பிரமணியன், செ.கண்ணப்பன், எஸ்.எஸ்.துரைராஜு, சங்கிலிமுருகன், அன்பாலயா பிரபாகரன், எம்.காஜாமைதீன், சௌந்திர பாண்டியன், புஷ்பா கந்தசாமி, ஆனந்தி பிலிம்ஸ் நடராசன், எம்.ராமநாதன், ஆபாவாணன், கே.விஜயகுமார்,

எச்.முரளி, எஸ்.எஸ்.சக்கரவர்த்தி, எஸ்.எம்.உமர், ஹென்றி, சுந்தர் தியேட்டர் கண்ணப்பன், நந்தகோபால் செட்டியார், பழனியப்ப செட்டியார், ஜெயின்ராஜ் ஜெயின், சந்திரப்பிரகாஷ் ஜெயின்,  கலைப்புலி ஜி.சேகரன், மணிவாசகம், கே.பாலு, எம்.ராஜாராம் (எம்.ஆர்.), அமுதா துரைராஜ், என்.விஷ்ணுராம், கலைஞானம், சிவராமதாஸ், டி.ஆர்.சீனிவாசன், கே.சுபாஷ், எம்.வேதா, கே.முருகன், கே.வி.குணசேகரன், பாபு கணேஷ், எம்.கபார், ராமதுரை, மேக்னட் ராஜாராம், டி.வி.எஸ்.மணி, எம்.ஜி.சேகர், சந்தானம், வெடிமுத்து, ஆர்.வடிவேலு, கருமாரி கந்தசாமி, ஆலயம் ஸ்ரீராம், ரங்காராவ்,

பாரதிராஜா, கே.பாக்யராஜ், ஆர்.பார்த்திபன், எஸ்.ஏ.சந்திரசேகரன்,  பி.வாசு, விசு, ஆர்.கே.செல்வமணி, வி.சி.குகநாதன், பி.கலைமணி, டி.பி.கஜேந்திரன், பிரகாஷ்ராஜ், மனோஜ்குமார், மன்சூரலிகான், ராஜ்கிரண், எஸ்.எஸ்.சந்திரன், கே.டி.குஞ்சுமோன், கஸ்தூரிராஜா, ஆர்.வி.உதயகுமார், அர்ஜுன், கோவைமணி உட்பட பலர் உதவியாக இருந்தார்கள். சங்கத்தின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் அவர்களுடைய பங்கு மகத்தானது. அவர்களுக்கு எனது நன்றிகள்!.  


அணிந்துரை


அணிந்துரை
தமிழ்த் திரைப்படத் துறையில் பத்திரிகையாளனாக, பத்திரிகைத் தொடர்பாளனாக தொடர்ந்து செயல்பட்டு வரும் அருமைத் தம்பி பாலன், தனக்குள் ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக திரையுலகில் நடைபெற்ற, குறிப்பாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தலைவர் கே.ஆர்.ஜி. அவர்களின் பங்களிப்பை இந்த நூலில் தொகுத்துள்ளார். அவரது முயற்சிக்கு முதலில் எனது பாராட்டுக்கள்.
மறைந்த தலைவர் கே.ஆர்.ஜி. அவர்களைப் பற்றி எத்தனை புத்தகங்கள் வேண்டுமானாலும் எழுதலாம். அந்தளவுக்கு திரையுலகில் அவரது சாதனைப் பணிகள் எண்ணில் அடங்காது.
தலைவர் கே.ஆர்.ஜி. அவர்கள் போர்க்குணம் படைத்தவர். பரிசுத்தமான போராட்ட வீரர். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் போராளியாகத் திகழ்ந்தவர். தயாரிப்பாளர்களைப் பாதுகாக்கும் கேடயமாக, கவசமாக, போர்வாளாக செயல்பட்டவர்!
'தயாரிப்பாளர்கள் நலமாக இருக்க வேண்டும்' என்று பெரிதும் விரும்புவார். 'தயாரிப்பாளர் சங்கம் தயாரிப்பாளர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும்' என்று சிந்திப்பார். 'சங்கத்திற்கு தனி இடம் வேண்டும்' என்று ஆசைப்பட்டார். சங்க அலுவலகத்தில் தயாரிப்பாளர் உட்கார்ந்து பேச வேண்டும் என்று முதன் முதலில் நாற்காலி, மேஜை வாங்கினார்.
தயாரிப்பாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றித்தான் தினமும் யோசிப்பார். காலை, மாலை இருவேளையும் சங்க அலுவலகத்திற்கு வந்துவிடுவார். மழை கொட்டினாலும் வெள்ளம் அலுவலகத்தைச் சூழந்தாலும் அலுவலகத்திற்கு வந்து சேவை செய்வார். கே.ஆர்.ஜி. அவர்களின் மறைவு தமிழ்த் திரையுலகிற்கு பெரும் இழப்பே ஆகும்.
திரையுலகில் ஒரு மாபெரும் சக்தி ஓங்கி இருந்த போது, அதனை எதிர்த்து, தயாரிப்பாளரும் சக நிலைக்கு வர பாடுபட்டவர். திரையுலகில் அவர் இல்லாத இடம் இன்னும் வெற்றிடமாகவே இருக்கிறது. அவர் தலைவராக இருந்த போது தயாரிப்பாளர் சங்கத்திற்கு பொற்காலமாக இருந்தது என்றால், அது மிகையாகாது.
இன்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் எட்டு கோடி நிதி இருக்கிறது என்றால், அதற்கு முதல் காரணம் அவர்தான். தயாரிப்பாளர்களின் குடும்பங்களுக்கு லட்சம் லட்சமாக நிதி வாரி வாரி கொடுக்கிறோம் என்றால் அது அவர் தொடங்கி வைத்த பெரும் பணியே!
அவருடைய ஆசி இந்த திரையுலகத்திற்கு எப்போதும் இருக்க வேண்டும் என்பதுதான் எனது அவா!
கே.ஆர்.ஜி. அவர்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவராக இருந்த போது, அங்கு தம்பி பாலன், பி.ஆர்.ஓ.வாக வேலை செய்து வந்தார். அப்போது அங்கு பார்த்த நிகழ்வுகளை இந்த நூலில் பதிவு செய்துள்ளார்.
இந்த புத்தகத்திற்குள் அன்றைய தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் வரலாறும் புதைந்து கிடக்கிறது. படிக்கும் போது ஒவ்வொரு பக்கத்திலும் கே.ஆர்.ஜி. என்கிற மகத்தான ஆளுமையின் ஆன்மா நிதர்சனமாக தெரிகிறது. அவரைப் போன்ற மனிதர்களை இனி பார்க்க முடியுமா என்பது சந்தேகம்?
தம்பி பாலனின் எழுத்து நடை படிக்க ஆர்வத்தைத் தூண்டும். அவர் எழுதிய முதல் சிறுகதை தொகுப்பை என்னிடம் கொண்டு வந்து முதலில் காட்டி வாழ்த்துப் பெற்றார்.
‘சௌந்தர்யா’, ‘சரசு’, நினைவெல்லாம் நீ தானே’, ‘மனசுக்குள் வரலாமா’, ‘வேண்டுமடி நீ எனக்கு’, ‘குடிமகன்’, ‘மனுஷி’, ‘இணைந்த இதயங்கள்’ என 8  நூல்களை எழுதிய பாலன், ‘தலைவர் கே.ஆர்.ஜி.’ என்ற இந்த படைப்பை 9-வது நூலாக வெளியிட்டுள்ளார்.
‘கோடம்பாக்கம் டுடே’ என்கிற மாத இதழை தொடங்கிய போது அந்த இதழின் முதல் பிரதியை என்னை வெளியிட வைத்த பாலன், 'ஒத்த வீடு’ என்கிற படத்தை இயக்கிய போது அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் என்னைப் பாராட்ட வைத்தார்.
இப்போது ‘தலைவர் கே.ஆர்.ஜி.’ என்கிற இந்தப் புத்தகத்திற்கு என்னை அணிந்துரை எழுத வைத்திருக்கிறார். பாலன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் எனது வாழ்த்தும், பாராட்டும் எப்போதும் இருக்கும். அது இந்த படைப்புக்கும் உண்டு.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் பற்றி தெரிந்து கொள்ள இந்த நூல் பெரிதும் உதவியாக இருக்கும். தயாரிப்பாளர்கள் இந்த நூலை பாதுகாக்க வேண்டும் என்பது என் அவா!
கலைப்புலி எஸ்.தாணு
முன்னாள் தலைவர்
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்.


01. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமும், நானும்


கேயார் மற்றும் கே. ஆர். ஜியுடன் பாலன் 
பிலிம் சேம்பர் வளாகத்தின் பின்புறம் அமைந்திருந்த ஒரு பழைய கட்டடத்தில், மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், சேப் யூனியன் ஆகிய சங்கங்களின் அலுவலகங்கள் வரிசையாக இருந்தன.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் உள்ளே, தலைவர் அமர்வதற்கு ஒரு மேஜை நாற்காலியும், ஒரு மடக்கு சோபாவும், மேனேஜருக்கு ஒரு மேஜை, நாற்காலி மட்டுமே இருந்தன.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக கே.ஆர்.ஜி. அவர்கள் வெற்றி பெற்றதும், அவருடன் பொருளாளராகப் பதவிக்கு வந்திருந்த மறைந்த தரங்கை சண்முகம் அவர்கள், தனது சொந்தச் செலவில் அலுவலகத்தை வெள்ளை அடித்து, வவுச்சர் மற்றும் ரசீது புத்தகங்களை அச்சடித்து கொடுத்திருந்தார்.

செயலாளருக்கு ஒரு மேஜை நாற்காலியையும், செயற்குழு கூட்டம் நடத்த வசதியாக இருபத்தி நான்கு பிளாஸ்டிக் நாற்காலிகளையும் அப்போது புதிதாக வாங்கி இருந்தார்.

டைமண்ட் பாபு
சங்கத்தின் தலைவராக கே.ஆர்.ஜி. அவர்கள் பதவிக்கு வந்த போது, அவரைப் பற்றிய செய்திகளை வெளியிடுவதற்காக எனது குருநாதர் டைமண்ட் பாபு ,சங்க அலுவலகத்திற்குச் செல்வார். அவருடன் நானும் சென்று வருவேன். பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்து மறுநாள் செய்தி வெளிவந்த பத்திரிகைகளை எடுத்துச் சென்று கே.ஆர்.ஜியிடம் காண்பித்து வரவேண்டும். அப்படித்தான் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் எனக்குமான தொடர்பு தொடங்கியது.

கே.ஆர்.ஜி. பற்றிய செய்தி வந்த ஒரு ஆங்கில வார இதழை எடுத்துக் கொண்டு தயாரிப்பாளர் சங்கம் சென்ற போது, திரு.டைமண்ட் பாபு அவர்களை உடனே தொலைபேசியில் அழைக்கச் சொன்னார் கே.ஆர்.ஜி

மும்பை மற்றும் டில்லியில் ’ராஜமுத்திரை’ படத்தின் படப்பிடிப்புக்காக லொக்கேஷன் அனுமதி பெற டைமண்ட் பாபு அவர்கள் சென்று இருப்பதை அவரிடம் தெரிவித்தேன்.

தயாரிப்பாளர் சங்கத்தின் அவசரக் கூட்டமும், அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பும் நடத்த முடிவு செய்திருந்தார் கே.ஆர்.ஜி.

சிறிது நேரம் யோசித்தவர், ‘பத்திரிகையாளர் கூட்டத்திற்கு நீ ஏற்பாடு செய்’ என்று கட்டளையிட்டார்.

குருநாதர் இல்லாமல் பத்திரிகையாளர் கூட்டத்திற்கு நான் ஏற்பாடு செய்வதா? என்று நான் தயங்கினேன். ஆனால் கே.ஆர்.ஜி. வார்த்தைக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்பதால், மறுக்க முடியாமல் அவர் சொல்லுக்கு கட்டுப்பட்டு அந்த பத்திரிக்கையாளர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தேன்.

தரங்கை சண்முகம்
பத்திரிகையாளர் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. மறுநாள் அனைத்து பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகி இருந்தன. அந்தப் பத்திரிகைகளை எடுத்துக் கொண்டு திரு.கே.ஆர்.ஜியிடம் காண்பிப்பதற்காகச் சென்ற போது, அவர் அத்தனைப் பத்திரிகைகளையும் ஆர்வத்துடன் படித்துப் பார்த்தார். எனது வேலையை மனம் திறந்து பாராட்டினார்.

நான் டைமண்ட் பாபுவிடம் எத்தனை ஆண்டுகளாக உதவியாளராக வேலை செய்கிறேன் என்பதை கேட்டறிந்தவர், பிறகு என்னைப் பற்றியும் என் குடும்பம் பற்றியும் வருமானம் குறித்தும் விசாரித்தார்.

”காலையில் இருந்து இரவு வரை நேரம் காலம் பார்க்காமல் சங்கத்துக்கும், உறுப்பினர்களுக்கும் விசுவாசமாக வேலை செய்ய ஒரு ஆள் தேவை. நீ என் கூட இங்கே இரு. நான் டைமண்ட் பாபுவிடம் சொல்லி அவருக்கு வேறு உதவியாளர் வைத்துக்கொள்ள சொல்கிறேன் ”என்று கூறினார்

அருகில் இருந்த மேனேஜர் சீனிவாசன், செயலாளர் டி.என்.ஜானகிராமன் ஆகியோரிடம் ‘’இன்னையிலிருந்து சங்கத்துக்கு மக்கள் தொடர்பாளராகப் பாலனை நியமித்திருக்கிறேன். அவனிடம் கடிதம் வாங்கிக் கொண்டு வேலைக்கு சேர்த்துக் கொள்ளுங்கள்’’ என்றவர், என்னைப் பார்த்து, ‘’உனக்கு நிறைய வேலைகள் இருக்கு. நாளை முதல் அந்த வேலைகளைச் செய்ய வேண்டும்’’  என்று கூறினார்.

பாலன்.
பிலிம் சேம்பர் அளவுக்கு உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். அதற்காகப் படம் தயாரித்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்களை நேரில் சந்தித்து அவர்களைத் தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்க்க வேண்டும்.

செயற்குழுக் கூட்ட அழைப்புக் கடிதத்தை நேரில் சென்று நிர்வாகக் குழு, மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும். கூட்டம் நடக்கும் போது அங்கு பேசப்படும், விவாதிக்கப்படும் நடவடிக்கைகளைக் குறிப்பெடுத்துப் புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும். முக்கிய தீர்மானங்களை உடனடியாகச் சுற்றறிக்கை மூலம் அனைத்து உறுப்பினர்களுக்கும் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தல், திரைப்பட சம்பந்தமான தொடக்க விழா, பாடல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்களை உறுப்பினரிடம் இருந்து பெற்று செயற்குழு உறுப்பினர்களுக்கு நேரில் கொண்டு சேர்த்தல் உள்பட பல வேலைகளைச் செய்ய எனக்கு உத்தரவிட்டார்.

இப்படித்தான் 1994-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் நான் வேலைக்குச் சேர்ந்தேன்.

02. தயாரிப்பாளரின் ஆத்திரம் சங்கத்தின் அங்கீகாரம்


தலைவர் கே.ஆர்.ஜி.- திரு.முக்தா சீனிவாசன் 
அந்தக் காலகட்டத்தில் திரைப்படங்கள் அவுட் ரைட், அல்லது எம்.ஜி. முறையில் திரையிடப்பட்டன. அதற்கு எந்தப் பிரச்சினையும் பெரிதாக இருந்ததில்லை. ஆனால், டிஸ்ட்ரிப்யூஷன் எனப்படும் விநியோக முறையில் திரையிடப்பட்ட படங்களுக்குப் பெரும் பிரச்சினைகள் இருந்தன.

தயாரிப்பாளரின் முந்தைய படம் பற்றிய வரவு செலவு கணக்குகளை உடனுக்கு உடனே தீர்த்துக் கொள்ளாமல் இருக்கும் தயாரிப்பாளர்கள், அடுத்த படத்தின் வெளியீட்டின் போது வினியோகஸ்தரின் பழைய பாக்கித் தொகையை செலுத்த வேண்டிய நிலைக்கு ஆளாகிவிடுவார்கள்.

பாக்கித் தொகையை படம் தொடங்கும் போது சொல்லமாட்டார்கள். படம் முடிந்து வெளியீட்டுக்கு தயாராகும் போதுதான் தெரிவிப்பார்கள். அதனால், ஒவ்வொரு மாவட்ட விநியோகஸ்தர் சங்கத்திற்கும் கடைசி நேரத்தில் நேரில் சென்று பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள வேண்டிய நிலை தயாரிப்பாளர்களுக்கு அப்போது இருந்தது. இல்லை என்றால், அந்தப் படத்திற்கு ’ரெட்’ என்கிற தடை நடைமுறையில் இருந்தது.

படம் பெற தியேட்டர் அதிபர்களும், படம் வெளியிட தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களை நம்பியே இருந்தனர். அதனால், திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கங்கள் ஒவ்வொரு சினிமா மாவட்டத்திலும் வலிமையாக இருந்தன.

தயாரிப்பாளர் - விநியோகஸ்தர் பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்த்து வைத்திடப் படத்தயாரிப்பாளர், தயாரிப்பாளர் சங்கத்திற்கு வர வேண்டும். அதற்குத் தயாரிப்பாளர் சங்கம் துணை நிற்கும் என்று அறிவித்தார் தலைவர் கே.ஆர்.ஜி.

அதே போல, ஒவ்வொரு மாவட்ட விநியோகஸ்தர் சங்கங்கத்துக்கும் கடிதம் எழுதி, தமிழ்ப் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மூலமாகவே பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.

உண்மையாகச் சொல்வதென்றால் பணம் போட்டுப் படம் தயாரிக்கும் படத் தயாரிப்பாளர்களுக்கு மரியாதை கிடைக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் கூப்பிட்டு அவர்களை நிற்க வைக்காதீர்கள் என்கிற மாதிரியான வேண்டுகோள், அது.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் வலிமை பெறுவதற்கு முன் அப்படிப்பட்ட நிலை தயாரிப்பாளர்களுக்கு இருந்தது என்பதைக் கண் கூடாகப் பார்த்திருக்கிறேன்.

வேறு ஒருவருக்கு படத்தை விற்றதால், முன்பு படம் வாங்கிய விநியோகஸ்தர்,  மதியம் இரண்டு மணிக்கு ஒரு தயாரிப்பாளரை அவரது அலுவலகத்தில் துணைக்கு வந்த ஆட்களை வைத்துக் கொண்டு அடித்திருக்கிறார். அவர் சங்கத்திற்கு அழுது கொண்டு போன் செய்ததும், உடனடியாக நான் தலைவர் கே.ஆர்.ஜி. அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்ல, அவர் அதிரடியாக இறங்கி நடவடிக்கை எடுத்தார். அதே போல நிதி உதவி செய்தவர்கள் மிரட்டல், அடி, உதைகள் என பல துன்பங்களைச் சில தயாரிப்பாளர்கள் அனுபவித்திருக்கிறார்கள்.

நடிக்க முன் பணம் வாங்கிக் கொண்டு கால்ஷீட் கொடுக்காத சில நடிகர், நடிகைகளால் தயாரிப்பாளர்கள் கஷ்டத்திற்கு ஆளானார்கள். அதனால், தயாரிப்பாளர்களுக்கு உதவியாக அவர்களுக்கு பாதுகாப்புக் கேடயமாகத் தயாரிப்பாளர் சங்கத்தின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று கருதினார் கே.ஆர்.ஜி.

பல வெற்றிப் படங்களைத் தயாரித்த ஒரு தயாரிப்பாளர் இறந்த போது, அவரது இறுதி காரியத்திற்குச் செலவுக்குப் பணம் இல்லாமல் இருந்ததை நேரில் கண்டு வேதனைப்பட்டிருக்கிறார். அதனால், தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையில் தயாரிப்பாளர் சங்கம் இருக்க வேண்டும் எனவும் முடிவு செய்திருந்தார்.

தயாரிப்பாளர் சங்கத்தில் நூற்றி எழுபது உறுப்பினர்கள் மட்டுமே அப்போது இருந்தனர். அதில் சில உறுப்பினர்கள் சந்தா செலுத்தாமல் கூட இருந்தனர். அதனால், உறுப்பினர் ஆகாமல் வெளியே தமிழ்ப் படம் எடுக்கும் அனைத்து தயாரிப்பாளர்களையும் சங்கத்தில் சேர்க்க வேண்டும் என்று என்னை தினமும் விரட்டினார்.

ஆயிரம் ரூபாய் நன்கொடை, இரு நூறு ரூபாய் ஆண்டு சந்தா, நூறு ரூபாய் நுழைவுக் கட்டணம் என ஆயிரத்து முன்னூறு ரூபாயில் உறுப்பினர் சேர்க்கை இருந்தது. விண்ணப்பப் படிவங்களைக் கையில் வைத்துக் கொண்டு, படத் தொடக்க விழா, பாடல் வெளியீட்டு விழா, பட அலுவலகங்கள் என்று நேரம் காலம் பார்க்காமல் தயாரிப்பாளர்களைத் தேடி ஓடினேன்.

பொன்மானச் செம்மலுக்கு மாலை அணிவிக்கும் கே.ஆர்.ஜி. 
சிலர் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்து கொண்டானர். சிலர் விவாதித்தனர். சிலர் கிண்டல் செய்தனர். சிலர் ஏளனம் செய்தனர். சிலர் ஆயிரத்து முன்னூறு ரூபாய்க்காகப் பல முறை அலையவிட்டனர். முயற்சிகள் வெற்றி பெறும் என்கிற ஒரே இலக்கோடு ஓடு ஓடு என்று என்னை விரட்டினார் திரு. கே.ஆர்.ஜி.

ஒரு நாள் மதியமே திரும்பி வந்துவிட்டேன்.  ‘’என்ன பாலா... இன்னைக்கு எத்தனைப் பேரைப் பார்த்தே?... ‘’ என்று ஆர்வத்துடன் கேட்டார்,

நான் ஒரு தயாரிப்பாளரிடம் போய் டோஸ் வாங்கி வந்த தகவலைச் சொன்னதும், அதிர்ந்து போனார்.

தயாரிப்பாளர் சங்கம் ஒரு லெட்டர் பேடு சங்கம். அங்கு உறுப்பினராகி என்ன பயன்? படத்திற்குப் பெயர் வைத்து பதிவு செய்து சென்சார் கிளியரன்ஸ் பெறுவது என்றால் கூட, பிலிம் சேம்பருக்கோ, கில்டு அமைப்புக்கோதான் செல்ல வேண்டும். அதனால் அவர்களைப் பகைத்துக் கொண்டு தயாரிப்பாளர் சங்கத்தில் ஏன் உறுப்பினராக வேண்டும் என்பதைக் கடுமையான வார்த்தைகளால் அந்தத் தயாரிப்பாளர் அர்ச்சனை செய்திருந்தார். அதை அப்படியே சொன்னேன்.

அந்தத் தயாரிப்பாளர் கேட்பதில் நியாயம் இருப்பதை உணர்ந்த தலைவர் கே.ஆர்.ஜி. அவர்கள், உடனடியாகச் செயற்குழுக் கூட்டத்தை கூட்டி, அதற்கு தீர்வுகாண முயன்றார்.

மூத்த உறுப்பினர் திரு.முக்தா சீனிவாசன் அவர்களைச் சங்க செலவில் டில்லிக்கு அனுப்பி வைத்து, மத்திய தகவல் மற்றும் செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தில் பேச வைத்தார்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மூலமாக வரும் பதிவு செய்த படப் பெயர் கடிதம், மற்றும் பப்ளிசிட்டி கிளியரன்ஸ் சான்றிதழ் பெற்றுக் கொண்டு படங்களைத் தணிக்கை செய்து சான்றிதழ் வழங்கும்படி மத்திய தணிக்கைக் குழுவுக்கு உத்தரவிட க் காரணமாக இருந்தார்.

இந்த உரிமைக்கான முயற்சியும், வெற்றியும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு பெரிய அங்கீகாரமாக இருந்தது. இதை எதிர்பாராத மற்ற அமைப்புகள் ஆடித்தான் போயின.