Saturday, April 27, 2019

19. ரஜினி பராட்டிய விஜய் படத்தின் பெயர்?

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஒரு படத்தை தயாரிக்க இருந்தார் தலைவர் கே.ஆர்.ஜி. அதற்காக ரவிக்குமாரிடம் முன்பணம் கொடுத்திருந்தார். ‘டூயட் படத்தின் தோல்வியால், கவிதாலாயா நிறுவனத்திற்கு உடனடியாக ஒரு படம் நடித்து தரவேண்டும் என்று ரஜினியிடம் கே.பாலசந்தர் கேட்டுக் கொண்டார். இதனால் ரஜினியை வைத்து கே.ஆர்.ஜி. எடுக்க இருந்த படத்தின் முயற்சி தள்ளிப் போனது.

ஒரு நாள் கே.ஆர்.ஜியைப் பார்க்க, அவரது வீட்டுக்கு வந்திருந்தார் ரஜினி. கவிதாலாயா தயாரிக்கும் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்க வேண்டும். அதற்கு உங்கள் அனுமதி வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அப்படி உருவானதுதான் ‘முத்து’ திரைப்படம்.

அதன் பிறகு பல முன்னணி தயாரிப்பாளர்கள் ரஜினியிடம் கால்ஷீட் கேட்டிருந்தனர். எல்லோருக்கும் கால்ஷீட் கொடுக்க முடியாத நிலை ரஜினிக்கு இருந்தது. அதனால், நாகராஜன் ராஜா நிர்வாகத் தயாரிப்பில் ‘அருணாசலம் படத்தைத் தயாரித்து அதில் வரும் வருமானத்தில் சில தயாரிப்பாளர்களுக்கு உதவுவது என்று முடிவு செய்திருந்தார் ரஜினி.

அந்த பட்டியலில் கே.ஆர்.ஜி. பெயரும் இருந்ததாம். ஆனால், “எனக்கு தனியாக படம் தயாரிக்க கால்ஷீட் வேண்டும். உதவித் தொகை வேண்டாம் என்று கே.ஆர்.ஜி. கூறிவிட்டாராம்.

தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வந்த விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் பேசிக் கொண்டிருந்த கே.ஆர்.ஜி. விஜய் பட கால்ஷீட் விஷயமாகவும் அவரிடம் பேசினார்

விஜய்யின் கால்ஷீட் தருவதாக எஸ்.ஏ.சந்திரசேகர் ஒப்புக் கொண்டார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கம், தேவா இசை என்று முடிவு செய்து, என்னை அழைத்து இவர்களது கூட்டணி எப்படி இருக்கும் என்று எதிர்ப்பார்ப்போடு கேட்டார், தலைவர் கே.ஆர்.ஜி.

“கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய எந்தப் படமும் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால், நீங்கள் இப்பவே வெற்றிப் பெற்று விட்டீர்கள் முதலாளி’’ என்று அவரிடம் தெரிவித்தேன். அதைக் கேட்டதும் அவருக்கு எலையில்லா மகிழ்ச்சி உண்டானது. 

அதன் பிறகு கே.எஸ்.ரவிக்குமாரைச் சந்தித்து பேசினார் கே.ஆர்.ஜி. அப்போது ரஜினி நடித்த ‘படையப்பா’ படத்தை இயக்கிக் கொண்டிருந்தார் கே.எஸ்.ரவிக்குமார்.

அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘மின்சார கண்ணா பாடல் எடுத்துக் கொண்டிருந்த நேரம் என்பதால், விஜய் நடிக்க இருந்தப் படத்திற்கும் ‘மின்சார கண்ணா’ என்று பெயர் வைத்தார் கே.எஸ்.ரவிக்குமார்.

உடனடியாக ‘மின்சார கண்ணா’ படப் பெயரை பதிவு செய்து டிசைன் செய்ய உத்தரவிட்டார் கே.ஆர்.ஜி..

டிசைன் தயாராகி வந்ததும் அதைப் பார்த்தவர், உடனடியாக டிசைனை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் சென்று காட்டி வருமாறு என்னிடம் கூறினார்.

ஏவி.எம்.ஸ்டுடியோவில் உள்ள கார்டனில் ‘படையப்பா’ படத்தின் படப்பிடிப்பில் இருந்தார் கே.எஸ்.ரவிக்குமார். அந்தப் படத்தில் இடம் பெற்ற ‘’நீ மீசை வச்ச குழந்தையப்பா’’ என்கிற ஷாட்டில் வரும் குழந்தையின் முகத்தை படமாக்கிக் கொண்டிருந்தார்.

அந்த ஷாட் முடிந்ததும் அவரிடம் சென்று டிசைனை காட்டினேன். அதைப் பார்த்தவர், அருகில் இருந்த ரஜினியிடமும் காட்டினார். படக்கென்று எழுந்து டிசைனைப் பார்த்த ரஜினி, ‘சூப்பர் சூப்பர்’ என்று பாராட்டினார்.


தியாகராயநகரில் உள்ள ஜி.ஆர்.டி. ஹோட்டலில் ‘மின்சார கண்ணா படத்தின் பிரமாண்ட துவக்க விழாவும், பிறகு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு பங்களா வீட்டில் படப்பிடிப்பும் துவங்கியது.

தினமும் காலை பதினொரு மணிக்கு தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வரும் தலைவர் கே.ஆர்.ஜி., மதியம் ஒரு மணிக்கு வீட்டிற்குச் செல்வார். மாலை நான்கு மணிக்கு மீண்டும் வரும் அவர், இரவு எட்டு மணி வரை சங்கத்தில் இருப்பார்.

இப்படி 1994 முதல் 1999 வரை ஆறு வருடங்கள் சங்கத்தின் வளர்சியிலும், முன்னேற்றத்திலும் முழுக் கவனம் செலுத்தியவர், அப்போது படத் தயாரிப்பிலும் கவனம் செலுத்த வேண்டிய நிலைக்கு மாறினார்.

படத் தயாரிப்பு செலவை கட்டுப்படுத்த ஒரு குழுவை தேர்வு செய்தார் கே.ஆர்.ஜி. அந்த குழு அவருக்கு எதிரான ஒரு குழுவாக மாறும் என்பது அப்போது அவருக்கு மட்டுமல்ல எனக்கும் தெரியவில்லை.

No comments:

Post a Comment