Saturday, April 27, 2019

10. எதிராக இருந்தவர்களை அரவணைத்த சங்கம்!



கே.ஆர்.ஜி.
தயாரிப்பாளர்களிடம் நேரில் சென்று பேசி உறுப்பினர் சேர்ப்பது, தயாரிப்பாளர்களிடம் இருந்து பாடல்களைப் பெற்று தொலைக்காட்சிகளுக்குக் கொடுப்பது, செயற்குழுக் கூட்ட அழைப்புக்குக் கடிதம் கொடுப்பது என பல வேலைகளைச் செய்ய எனது சைக்கிளைப் பயன்படுத்தி வந்தேன். தினம் பல கிலோ மீட்டர் மிதிக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. ஆனால், உற்சாகம் குறைந்தது கிடையாது.
எனது அலைச்சலையும், உழைப்பையும் பார்த்த .கே.ஆர்.ஜி. அவர்கள், உடனே அலுவலகத்திற்கு ஒரு டூவீலர் வாங்கச் சொன்னார். அப்போது, உடனே டு வீலர் வாங்க முடியாது. முன்பணம் கொடுத்து புக் செய்தால் மூன்று மாதம் கழித்துதான் டிவிஎஸ் சேம்ப் கிடைக்கும்.
அதே போல தொலைபேசி இணைப்பு பெறுவதற்கு கூட மூன்று மாதம் ஆறு மாதம் ஆகும். அதற்கு முப்பதாயிரம் டெபாசிட் கட்ட வேண்டியது இருந்தது. இரண்டையும் அலுவலகத்திற்குப் பெற முயற்சி நடந்தது.
நான் சங்கத்தில் வேலைக்கு சேரும் போது நூற்றி எழுபது உறுப்பினர்கள் இருந்தனர். திரு கே.ஆர்.ஜி. அவர்களும், திரு கேயார் அவர்களும் என்னை விரட்டி விரட்டி வேலை வாங்கியதன் விளைவு நானூறு உறுப்பினர்களுக்கு மேல் உயர்ந்திருந்தது.
சங்கத்தின் சர்வீஸைப் பார்த்த பிறகுதான் உறுப்பினர்கள் தானாக வந்து சேர்ந்தனர். சுமார் முன்னூறு உறுப்பினர்களைச் சேர்க்க நான் அலைந்த அலைச்சல், பட்ட அவமானம் கொஞ்ச நஞ்சமல்ல. அப்போது வெறும் ஆயிரம் ரூபாய் நன்கொடை கட்டி சேரவே யோசித்தார்கள்.
நாசர்
அதன் பிறகு, நன்கொடை கட்டணத்தை பத்தாயிரம், இருபத்தி ஐந்தாயிரம் என்று உயர்த்திய போது, அவர்களாகவே தேடி வந்து சேர்ந்தார்கள். இப்போது மூன்று லட்சம் கட்டணம் வசூலிக்கப்படுகிறதாம்.
வெளிநாட்டைச் சேர்ந்த வைத்தியநாதன் என்பவர் நாசர் நடித்து இயக்கிய ‘அவதாரம்’ என்ற படத்தை தயாரித்துக் கொண்டிருந்தார். அவரை சந்திக்கச் சென்றேன். ஏவி.எம். ஸ்டுடியோவில் உள்ள ஆர்.ஆர் தியேட்டரில் அந்தப் படத்தின் பின்னணி இசை சேர்ப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அங்கு சென்று அவரைப் பற்றி விசாரித்த போது, நாசர் அவர்கள் வந்து என்னிடம் பேசினார்.
அவரிடம் சங்கத்தின் சர்வீஸ் பற்றியும், பாடல்கள் ஒளிபரப்பி தயாரிப்பாளர்களுக்கு உதவுவது பற்றியும், சொல்லிக் கொண்டிருந்தேன்.
‘’ஏற்கனவே பிலிம் சேம்பர் என்கிற அமைப்பு இருக்கும் போது இன்னொரு சங்கம் எதற்கு?, பாடல்கள் ஒளிபரப்புவதால் படத்திற்கு விளம்பரம் என்பதை விட, அது படத்திற்கு எதிரானது’’ என்று விவாதம் செய்தார் நாசர். அதில் கோபமும் இருந்தது.
புகழ் பெற்ற திறமையான நடிகர் நாசர். அவரிடம் நான்கு பேருக்கு முன்னால் விவாதத்தில் ஈடுபடக் கூடாது என்று, பதில் சொல்வது மரியாதை குறைவாக இருக்கும் என்று திரும்பிவிட்டேன்.
மதிய உணவுக்கு வீட்டுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்த தலைவர் கே.ஆர்.ஜி., என்னைக் கண்டதும், ‘’வா பாலா.... இன்னைக்கு எத்தனை தயாரிப்பாளர்களை பார்த்தே?’’ என்று ஆர்வமாகக் கேட்டார்.
அவரிடம் நாசர் அவர்கள் கூறியதைத் தெரிவித்தேன்.
சிவசக்தி பாண்டியன்
அதைக் கேட்ட அவர், ‘’கல்யாணத்திற்கு போனை போடு’’ என்று சொல்லியபடி நின்றார்.
ஏவி.எம். ஸ்டுடியோவில் உள்ள ஆர்.ஆர் தியேட்டர் தொலைபேசிக்கு அழைத்து, இசைஞானி இளையராஜாவின் மேனேஜர் கல்யாணத்தைத் தொடர்பு கொண்டு அவரிடம் கொடுத்தேன்.
கே.ஆர்.ஜி. கல்யாணத்திடம் பேசினார். பிறகு போனை வைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு நாசர் வந்தார். சாப்பிட்டுக் கொண்டிருந்த என்னைப் பார்த்து, “இங்கே வந்து என்னையா சொன்னே?’’ என்று ஆத்திரப்பட்டார்.
அவர் பதற்றத்தில் இருந்தார். நான் இயல்பாகப் பதில் சொன்னேன்.
பிறகு, உறுப்பினர் விண்ணப்பப் படிவத்தை மேனேஜரிடம் பெற்றுக் கொண்டார்.
காலம் உருண்டோடியாது. இப்போது நாசரின் மனைவி கமீலா நாசர், தயாரிப்பாளர் சங்க செயற்குழுவுக்கு போட்டியிடுகிறார். சங்க உறுப்பினர்களுக்கு சேவை செய்ய முன் வருகிறார். இதுதான் சங்கத்தின் வளர்ச்சி.
இதே போல தயாரிப்பாளர் சங்கத்தில் ஆரம்பத்தில் உறுப்பினர் ஆகாமல், சங்கத்திற்கு எதிராக முழு பக்க விளம்பரம் கொடுத்தவர் சிவசக்தி பாண்டியன். காலம், அவரை தயாரிப்பாளர் சங்கத்தின் கௌரவ செயலாளர் ஆக்கி, பல உறுப்பினர்களுக்குச் சேவை செய்ய வைத்து அழகு பார்த்தது, சங்கம்.
பி.எல்.தேனப்பன்
தயாரிப்பாளர் சங்கத்திற்கும், தொழிலாளர் அமைப்புக்கும் பிரச்சினை நடந்த போது, தொழிலாளர் அமைப்புக்கு ஆதரவாக, தயாரிப்பாளர் சங்கத்துக்கு எதிராக ‘காதலா காதலா’ என்கிற படத்தில் கமல் நடித்தார். அந்தப் படத்தைத் தயாரித்த பி.எல்.தேனப்பன், பிறகு தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் ஆகி பல தயாரிப்பாளர்களுக்கு கேடயமாக சேவை செய்துள்ளார்.
இப்படித் தனக்கு எதிராக இருந்தவர்களையும் தனது உறுப்பினர்களுக்கு வேலை செய்ய வைத்து, வேலை வாங்குகிறது தயாரிப்பாளர் சங்கம். அதுதான் சங்கத்தின் சாதனை.
சங்கம் இல்லாமல் சங்கடங்கள் தீராது. அனைவரும் சங்கமாய்ச்  சேருங்கள் என்று தயாரிப்பாளர்களுக்கு அறை கூவல் விட்டது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம். அதன் வெற்றியில் பல சாதனைகள் தொடர்கின்றன.  தமிழ்த் திரையுலகின் தலைமைச் சங்கமாக உயர்ந்து ஒளிர்கிறது.
இந்த சங்கத்திற்காக உழைத்தேன் என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.

No comments:

Post a Comment