நடிகர் திலகம் சிவாஜியுடன் கே.ஆர்.ஜி.
|
கலைத்துறையில் ஆற்றிய பங்களிப்பிற்காக நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
அவர்களுக்கு 1995 ஆம் ஆண்டு இவ்விருதை வழங்கினார்கள். இந்த விருதுக்குச் சிவாஜி
அவர்கள் தேர்வான கடிதம் கிடைத்த போது, அந்தச் செய்தியைப் பத்திரிகை அலுவலகங்களுக்கு நேரில்
சென்று கொடுத்து வர உதவியாளர் என்கிற முறையில் என்னை அனுப்பினார் சிவாஜியின்
செய்தித் தொடர்பாளரான பிலிம் நியூஸ் ஆனந்தன்.
ஈகா திரையரங்கில் மதியம் இரண்டு மணிக்கு ஒரு மலையாளப் படமும், மாலை ஆறு மணிக்கு பிலிம் சேம்பர் திரையரங்கில் ஒரு தமிழ்ப் படமும்
பத்திரிகையாளர்களுக்குத் திரையிட்டுக் காட்ட வேண்டிய வேலையும் அவருக்கு இருந்தன.
இந்த ’செவாலியே விருது’ பொதுவான செய்தி என்பதால், பத்திரிகை
அலுவலங்களுக்கு நேரில் சென்று கொடுக்க வேண்டி இருந்தது. அதனால், சைக்கிள் எடுத்துக் கொண்டு பத்திரிகை அலுவலகங்களுக்கு ஓடினேன்.
அன்று சரியான மழை. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு
அலுவலகத்திற்கும் நனைந்து கொண்டே பறந்தேன். படம் பார்க்க வேண்டிய ஆர்வமும்
இருந்ததால், எவ்வளவு விரைவாக கொடுக்க முடியுமோ அவ்வளவு வேகத்தில் சென்று அந்த
செய்தியைக் கொடுத்து முடித்தேன்.
படம் திரையிடுவதற்குள் வந்து சேர்ந்துவிட்டதால், பிலிம் நியூஸ் ஆனந்தன், என்னை நம்ப மறுத்தார்.
’’முக்கியமான செய்தி, நான் வேணும்னா திரும்ப போவட்டுமா’’
என்று சந்தேகத்துடனே கேட்டார். மறுநாள் அனைத்துப் பத்திரிகைகளிலும் செய்தி வந்த
பிறகுதான் நிம்மதி அடைந்தார்.
அந்தச் செய்தி தினத்தந்தியின் முதல் பக்கத்தில் கார்ட்டூன்
படத்திற்குக் கீழே நான்கு காலம் செய்தியாகப் பெரிதாக இடம் பெற்றிருந்தது. பத்திரிகைகளில் செய்தி வந்த மறுநாள், நடிகை ராதிகா அவர்கள், அந்த விருதின் பெருமைப் பற்றி
பெரிய பேட்டி ஒன்றை தினத்தந்தி பத்திரிகைக்குக் கொடுத்திருந்தார்.
அதுவரை அது ஏதோ ஒரு சாதாரண அமைப்பு புகழ் பெறுவதற்காக கொடுத்த விருது
என்று நினைத்தவர்கள், அந்த விருதின் பெருமை தெரிந்ததும் வியந்து போனார்கள்.
திரையுலகினர் பலர் சிவாஜி அவர்களின் இல்லத்திற்குச் சென்று அவரைச்
சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
செவாலியே விருது பெற்ற சிவாஜி அவர்களைப் பாராட்டும் விதமாக ஒட்டு
மொத்த திரையுலகம் சார்பில் அவருக்கு விழா எடுக்க வேண்டும் என்று முடிவு
செய்யப்பட்டது. அந்த விழா குழுவுக்கு திரு ஏவி.எம்.சரவணன் தலைவராக இருந்தார். திரு
கே.ஆர்.ஜி., திரு சிந்தாமணி முருகேசன், திரு.அபிராமி ராமநாதன் என
ஒரு பெரிய விழாக்குழு உருவானது.
அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்கள் தலைமையில், மத்திய மந்திரிகள், மாநில அமைச்சர்கள், மற்ற மாநில முதல்வர்கள் எனப் பலரும் அழைக்கப்பட்டு, ரஜினி,
கமல் என தென்னிந்திய திரையுலகின்
முன்னணி நட்சத்திரங்கள் ஏராளமானோர் கலந்து கொண்ட மிக பிரமாண்டமான விழா சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டு அரங்கில் 1995 ஆம்
ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி நடைபெற்றது.
இந்த விழாவுக்கு எனது குருநாதர் திரு டைமண்ட் பாபு அவர்கள் தலைமையில்
மக்கள் தொடர்பாளர்கள் பலர் கலந்து கொண்டு தங்களது சிறப்பான ஒத்துழைப்பை வழங்கி
இருந்தனர்.
மக்கள் தொடர்பாளராகவும், டைமண்ட் பாபு, பிலிம் நியூஸ்
ஆனந்தன் ஆகியோரின் உதவியாளராகவும், தமிழ் திரைப்பட
தயாரிப்பாளர் சங்கத்தின் மக்கள் தொடர்பாளர் என்கிற முறையிலும் எனக்கு வேலைப் பளு
அதிகமாக இருந்தது.
என்னைப் போலவே, ஏவி.எம். நிறுவன ஊழியர்களான விஸ்வநாதன், அர்ஜுனன், சண்முகம், பெரு.துளசி
பழனிவேல் எனப் பலரும் இந்த வேலையில் நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றினார்.
சிவாஜி அவர்கள் ஒப்பற்ற பெரிய நடிகர். பழகுவதற்கு இனிமையானவர்.
உயர்ந்த இடத்தில் இருந்தாலும், மரியாதை கொடுப்பதில், உண்மையாகப்
பேசுவதில் அவருக்கு நிகர் அவர்தான்.
தி.நகரில் உள்ள அன்னை இல்லத்திற்கு கே.ஆர்.ஜி., அவர்களுடன் செல்லும் போது அவரை பல முறை சந்தித்திருக்கிறேன். கே.ஆர்.ஜி.
அவர்களை ’’முதலாளி’’ என்றுதான் அழைப்பார் சிவாஜி. தயாரிப்பாளர் என்றால் அப்படி ஒரு
மரியாதை தருவார். ‘’என்ன சாப்பிடுறிய’’ என்று அன்போடு கேட்பார். ’உங்களுக்கு’
என்று என்னைப் பார்ப்பார். நடிகர் திலகத்தின் ரசிகனான எனக்கு அது பெரிய
மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.
மறக்க முடியுமா அந்த தருணத்தை... நன்றிக் பல பாலன் அவர்களே...
ReplyDelete