Saturday, April 27, 2019

30. பிலிம் சேம்பர் தலைவரான கே.ஆர்.ஜி.


மகன் கங்காதரன் மறைவுக்குப் பிறகு படம் தயாரிப்பதைத் தற்காலிகமாகப் நிறுத்திக் கொண்ட கே.ஆர்.ஜி., மீண்டும் தயாரிப்பாளர் சங்கம், பிலிம் சேம்பர் போன்ற தயாரிப்பாளர் அமைப்புகளில் தனது கவனத்தைச் செலுத்தினார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளின் தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோர்களை உறுப்பினராக கொண்ட ‘தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை’ என்று அழைக்கப்படும் பிலிம் சேம்பருக்கு ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும். ஒரு ஆண்டு தமிழ் உறுப்பினர் என்றால், அடுத்த ஆண்டு மலையாள உறுப்பினர், அதற்கு அடுத்த ஆண்டு தெலுங்கு உறுப்பினர், பிறகு கன்னட உறுப்பினர் என்று சுழற்சி முறையில் பதவிக்கு வருவார்கள்.

கே.சுப்பிரமணியம், ஏவி.மெய்யப்பன், எஸ்.எஸ்.வாசன், எல்.வி.பிரசாத், பி.ஆர்.பந்துலு, ஏ.எல்.சீனிவாசன், நாகி ரெட்டி, டி.ராமானுஜம், டி.வி.எஸ்.ராஜு, கே.பாலசந்தர், ஏ.வி.எம்.சரவணன், தாசரி நாராயணராவ், கொட்டாரக்காரா, அபிராமி ராமநாதன் என பல ஜாம்பவான்கள் தலைவராக பதவி வகித்த பிலிம் சேம்பரின் தலைவராக 2006 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை இரண்டு முறை கே.ஆர்.ஜி. பதவி வகித்தார். அந்த காலகட்டத்தில் பல பிரச்சினைகளைத் தீர்த்து வைத்துள்ளார். பிலிம் சேம்பரின் புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜையும் அவர் தலைவர் பதவியில் இருக்கும் போது நடைபெற்றது.

ராஜு ஈஸ்வரன் இயக்கத்தில் அபிராமி ராமநாதன் ‘பஞ்சாமிர்தம்’ என்கிற படத்தை தயாரித்தார். ஜெயராம், பிரகாஷ்ராஜ், அரவிந்த் ஆகாஷ், சரண்யா மோகன் உட்பட பலர் நடித்த அந்தப் படத்தின் துவக்க விழா 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் தேதி ஏவி.எம். ஸ்டுடியோவில் உள்ள ஒரு படப்பிடிப்புத் தளத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இவ்விழாவில் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர், தலைவர் கே.ஆர்.ஜி, கலைப்புலி எஸ்.தாணு, நடிகர் சரத்குமார் உட்பட பலர் கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தினார்கள். அந்த படப்பிடிப்புத் தளத்தின் வாசல்படியில் நடக்கும் போது, கால் இடறித் தலைவர் கே.ஆர்.ஜி. கீழே விழுந்துவிட்டார். கையை ஊன்றி விழுந்ததால் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார்.

நான் பட விழாவுக்குச் சென்ற போது, தலைவர் கே.ஆர்.ஜி. அவர்களின் உடல் நிலை குறித்து தகவல் கிடைத்தது. உடனே அருகில் இருந்த மருத்துவமனைக்கு ஓடினேன். எக்ஸ்ரே எடுப்பதற்காக அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பிறகு என்னைக் கண்டு வெம்பி வெடித்தார். எனக்கு இப்படி ஆகிவிட்டதே என்று வேதனைப்பட்டார். அவருக்குத் தைரியம் சொல்லி அருகில் இருந்து கவனித்துக் கொண்டேன். கையில் கட்டுடன் மூன்று நாட்கள் விஜயா மருத்துவமனையில் ஓய்வெடுக்க வேண்டியதாகிவிட்டது. புரொடக்சன் மேனேஜர் சசியும், நானும் அவரைக் கவனித்துக் கொண்டோம்.

உடல்நலம் தேறிய பிறகு மீண்டும் படத் தயாரிப்பில் இறங்கினார் கே.ஆர்.ஜி.. பல வெற்றிப் படங்களை இயக்கிய செல்வா இயக்கத்தில் மாதவன், அப்பாஸ், மம்தா மோகன்தாஸ், விவேக், எம்.எஸ்.பாஸ்கர், மயில்சாமி, தம்பி ராமையா, மனோபாலா, பட்டிமன்றம் ராஜா, பூவிலங்கு மோகன், ரேணுகா, மீரா கிருஷ்ணன், ஆர்த்தி உட்பட பலர் நடித்த அந்தப் படத்திற்கு ‘குரு என் ஆளு’ என்று பெயர் வைத்தார். யூ.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார்.

2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி வெளியான ‘குரு என் ஆளு’ படம் கே.ஆர்.ஜி. அவர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.

பார்த்த படத்தையே நான்கு முறை பார்க்கும் ரசிகராக இருந்தார், கே.ஆர்.ஜி. நண்பர்களுக்கு உதவி செய்ய பைனான்சியராக திரையுலகிற்கு வந்த கே.ஆர்.ஜி., சொந்தமாக ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால், கே.ஆர்.ஜி. பிகசர்ஸ், கே.ஆர்.ஜி. புரொடக்சன்ஸ், கே.ஆர்.ஜி. ஆர்ட் புரொடக்சன்ஸ், கே.ஆர்.ஜி. பிலிம் சர்க்யூட், கே.ஆர்.ஜி. பிலிம் இன்டர்நேஷனல், கே.ஆர்.ஜி. மூவீஸ் இன்டர்நேஷனல், கே.ஆர்.ஜி. என்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்களின் பெயரில் தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகர்களைக் கொண்டு முப்பது படங்களுக்கு மேல் தயாரித்தார்.  

கேரளாவில் திருவனந்தபுரம், கொச்சின், கோழிக்கோடு, பாலக்காடு, கோயம்புத்தூர், சென்னை ஆகிய இடங்களில் ஆறு அலுவலகங்கள் செயல்பட்டன. கோயம்புத்தூர் சாய்பாபாகாலனியில் சொந்த வீடு, சென்னை அண்ணாநகரில் பிரமாண்ட மாடி வீடு, அலுவலக உபயோகத்திற்கு நான்கு கார்கள், நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளிகள் என பெரிய நிறுவனத்தை நடத்தி வந்த கே.ஆர்.ஜி. அவர்கள் சில படங்களின் தோல்வியால் எல்லாவற்றையும் இழக்க வைத்தது.  

காலை இட்லி - சட்னி, மதியம் ஒரு கப் சாப்பாடு, இரவு ஒரு தோசை – சாம்பார், வெளியில் செல்ல ‘கே.ஆர்.ஜி. – 2558 என்கிற கார் மட்டுமே அவரது உலகமாக மாறிப் போனது. ஆனாலும், பட அலுவலகத்திற்குத் தினமும் சென்றார். சிகப்பு ரோஜாக்கள் படத்தை மீண்டும் தமிழில் எடுக்கவும், கன்னடத்தில் மீண்டும் படம் தயாரிக்வும் ஆலோசனைகள் செய்து கொண்டிருந்தார்.

நான் ‘ஒத்த வீடு’ என்கிற படத்தை இயக்கி முடித்ததும், அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு அவரை அழைக்க சென்றேன். படம் பற்றிய விவரங்களைக் கேட்டு தெரிந்து கொண்டவர், கன்னடத்தில் விஷ்ணுவரதன், கல்பனா நடிப்பில் ஒரு படத்தை தயாரித்திருக்கிறேன். அதனால், மீண்டும் கன்னடப் படம் தயாரிக்கும் முயற்சியில் இருக்கிறேன் என்பதை தெரிவித்தார்.

என்னுடைய ‘ஒத்த வீடு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசும் போது, “இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு அறிமுகமானவன் பாலன். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு பி.ஆர்.ஓ.வாக வந்தான். அவனை அங்கு பி.ஆர்.ஓ. வேலைக்கு சேர்த்து அட்டண்டர் வேலை வரை வாங்கினேன்.

சேனல்களில் சங்கம் மூலமாக புதுப்பட பாடல்கள் போடுகிற சூழ்நிலை வந்த போது அந்த வேலையையும் அவனிடம் ஒப்படைத்தேன். அந்த பொறுப்பில் நல்ல முறையில் நேர்மையாகச் செயல்பட்டான். தயாரிப்பாளர்களுக்கு உதவியாக, தயாரிப்பாளர் சங்கத்திற்கு உதவியாக இருந்தான்.

ராமநாதன் சார் ‘பஞ்சாமிர்தம் படம் தொடங்கிய போது அந்த விழாவுக்கு சென்ற எனக்கு கையில் அடிபட்டது. என் மகன் என்னை வாரி எடுக்கல. அவன் தான் என்னை வாரி எடுத்து கவனித்துக் கொண்டான். எக்ஸ்ரே எடுத்துப் பார்த்துட்டு உங்களுக்கு ஒண்ணுமே ஆகல முதலாளி என்று ஆறுதல் சொன்னான். உங்க கை நல்லா இருக்கு என்று டாக்டர் சொன்னதாக சொல்லித் தைரியம் கொடுத்தான்.

என் கையில் அசிங்கமே இல்லையடா.... சுத்தமாதாண்டா இருக்கும் என்று நான் பதில் சொன்னேன். நூறு தடவை ஓடி ஓடி வந்து என்னைப் பார்த்தான். இப்படி ஒரு நல்ல பையனை பார்ப்பது கஷ்டம். இந்த நல்ல பிள்ளையைப் பாராட்டணும் என்றுதான் இந்த விழாவுக்கு வந்தேன். இங்கு பல பேர் அவனைப் பாராட்டுவதைப் பார்க்கிற போது உண்மையாகவே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

பாலன் நல்ல உழைப்பாளி. எதுவுமே தானா வந்துடாது. உழைப்பில் அக்கறை இருந்தால், ஆர்வம் இருந்தால் மட்டுமே அது வரும்” என்று வாழ்த்திப் பேசிய கே.ஆர்.ஜி., பிறகு திரையுலகம் இன்று இருக்கிற நிலையைக் கண்டு வேதனைப் படுவதாக தெரிவித்தார். பணம் போட்டவன் பணம் எடுக்க முடியாத நிலைக்குத் திரையுலகம் போய்க் கொண்டிருக்கிறது என்பதையும் வேதனையோடு குறிப்பிட்டார்.


No comments:

Post a Comment