Saturday, April 27, 2019

15. புதிய உறுப்பினர்கள் சேர்க்கை?



கேபிள் டிவியின் வளர்ச்சி பெரிதாக பேசப்பட்ட நேரம். தங்களுடைய சந்தாதாரர்களை உற்சாகப்படுத்த போட்டி போட்டுக் கொண்டு புதிய படங்களைக் கேபிள் டிவியில் ஒளிபரப்பினார்கள். இதனால், திரையரங்கிற்கு வரும் கூட்டம் பெருமளவு குறைந்தது.
திரையரங்கிற்கு வரும் கூட்டம் குறைந்ததால், வசூல் இல்லாமல் விநியோகஸ்தர் தரும் படங்களுக்குத் திரையரங்கினரால், பணம் கொடுக்க முடியாத சூழ்நிலை.
வினியோகஸ்தர்களுக்குப் பணம் வராததால், தயாரிப்பாளரிடம் போட்ட ஒப்பந்தபடி, பணம் கொடுக்க விநியோகஸ்தரால் முடியவில்லை.
விநியோகஸ்தர்களிடம் இருந்து பணம் வராததால், தயாரிப்பாளரால் படத்தைத் தொடர முடியவில்லை.
தயாரிப்பாளர் படத்தை தொடர முடியாததைப் பார்த்து பைனான்சியர்கள் எதை நம்பி பணம் கொடுப்பது என்று பயந்து ஒதுங்கினர்.
இந்தச் சூழ்நிலையில் படப்பிடிப்பு எப்படி நடத்துவது என்று வழி தெரியாமல் தயாரிப்பாளர்கள் புலம்பிக் கொண்டிருந்த காலகட்டத்தில் தொழிலாளர் பிரச்சினை வெடித்திருந்தது.
இதனால், சில தயாரிப்பாளர்களைத் தவிர, பல தயாரிப்பாளர்களுக்கு இந்தப் போராட்டம் பெரிய பாதிப்பில்லை. பணம் இருந்தால்தானே படம் எடுக்க முடியும்?
தயாரிப்பாளர் சங்கத்திற்கு எதிராக பெப்சி தொழிலாளர்கள் உண்ணாவிரதம், போராட்டம் என்று களத்தில் இறங்கினர்.
படப்பிடிப்பை துவக்கிய படைப்பாளிகள் 
தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஆதரவாகச் செயல்பட இயக்குநர்கள் புதிய படைப்பாளி - தொழிலாளர் அமைப்பை உருவாக்கினர். புதிய உறுப்பினர்களைச் சேர்த்து நிர்வாகிகளை தேர்வு செய்து படப்பிடிப்புக்கு தயாரானார்கள்.
எல்லாத் துறைக்கும் தொழிலாளர்கள் சேர்ந்தாலும், கேமிராவை ஆன் செய்யும் தொழிலாளர்கள் மட்டும் சேரவில்லை. இதனால், மும்பையில் இருந்து கேமிராவும், அதற்கான தொழிலாளர்களையும் வரவழைத்து படப்பிடிப்பு தொடங்குவது என முடிவானது.
மும்பையில் இருந்து கேமிரா வரவழைக்கப்பட்டு, பொட்டானிக்கல் கார்டனில் ஜெயராம் நடித்த ஒரு படம், பிலிம் சிட்டியில் கஸ்தூரிராஜா இயக்கிய ஒரு படம், திரிசூலம் மலையில் குஷ்பு நடித்த ஒரு படம் என மூன்று படங்களின் படப்பிடிப்பு போலீஸ் பாதுகாப்புடன் துவங்கியது
மும்பையில் இருந்து வந்திருந்த கேமிரா எந்தெந்தப் படத்தின் படப்பிடிப்பிற்குச் செல்கிறது. அவர்களிடம் வாடகை வசூலிக்க வேண்டியது என அந்தப் பொறுப்புகளை என்னிடம் ஒப்படைத்திருந்தார் தலைவர் கே.ஆர்.ஜி.
ஒரு பக்கம் படப்பிடிப்பு நடந்தாலும், இன்னொரு பக்கம் பசி, பட்டினி என தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்.
எந்தப் பக்கமும் இறங்கி வந்து பேச யாரும் முன்வரவில்லை. ஆறு மாத காலம் போராட்டம் தொடர்ந்தது.
இயக்குநர் கே.பாலசந்தர் 
ஆரம்பத்தில் இணைந்து விடுவார்கள் என எதிர்ப் பார்த்த அரசியல் கட்சிகள், பிறகு தங்களுடைய ஆதரவினை தெரிவிக்க முயன்ற போது, அரசியலாகும் நிலைக்கு ஆளானது.
முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா தொழிலாளர்களுக்கு ஆதரவு அளித்து, தொழிலாளர்களுக்கு உதவினார்.
இந்த பிரச்சினை அரசியல் ஆவதை விரும்பாத முதல்வர் கலைஞர், இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர, இரு துருவங்களாக இருந்த  கே.ஆர்.ஜி.யையும், சிந்தாமணி முருகேசனையும் இணைய வைத்து அறிக்கை விட வைத்தார்.
பெப்சி – படைப்பாளி என்று பிரிந்திருந்த தொழிலாளர்கள் ஒன்று சேர வேண்டும் என்று அந்த அறிக்கை தெரிவித்தது. அதனைத் தொழிலாளர் அமைப்பு வரவேற்றது.
பெப்சி – படைப்பாளி என்று பிரிந்திருந்த தொழிலாளர்கள் ஒன்றிணைந்தனர். இணைந்த அந்த அமைப்புக்கு தலைவராக இயக்குநர் கே.பாலசந்தர் தேர்வானார்.
தொழிலாளர்கள் ஒன்றிணைந்தாலும், தொழிலைப் பாதிக்கும் பிரச்சினைக்கு யார் நடவடிக்கை எடுப்பார்?
கேபிள் டிவியில் படம் ஒளிபரப்பாமல் இருக்கவும், திருட்டு விசிடியை ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமே?.

No comments:

Post a Comment