Saturday, April 27, 2019

08. குற்றாலத்தில் நடந்த செயற்குழு!கே.முரளிதரன்
லட்சுமி மூவீ மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் கே.முரளிதரன், வி.சாமிநாதன், ஜி.வேணுகோபால் ஆகியோர் இணைந்து சரத்குமார் நடித்த ‘அரண்மனைக் காவலன்’, ‘வேலுச்சாமி’ ஆகிய படங்களை தயாரித்திருந்தனர். இவர்களில் கே.முரளிதரன் பைனான்சியராகவும் இருந்தார்.
மறைந்த தயாரிப்பாளர் தரங்கை சண்முகம் அவர்கள் தயாரித்த பல படங்களுக்கு கே.முரளிதரன் பைனான்ஸ்‌ செய்திருந்தார். தயாரிப்பாளர் – பைனான்சியர் என்பதைத் தாண்டி அவர்களுக்குள் நல்ல நட்பும், புரிதலும் இருந்தன. அதனால், முரளிதரன் அவர்களை, ‘’டார்லிங்’’ என்றுதான் போனில் செல்லமாக அழைப்பார் தரங்கை சண்முகம்.
தரங்கை சண்முகம் அவர்களின் மறைவுக்கு பிறகு, அவர் வகித்த பொருளாளர் பதவிக்கு கே.முரளிதரன் அவர்களை செயற்குழுவில் வைத்து தேர்வு செய்தார் தலைவர் கே.ஆர்.ஜி.
சங்க அறங்காவளாராக இருந்த டி.ஆர்.ராமண்ணா அவர்கள் காலமானதால், அந்த அறங்காவலர் பதவிக்கு செயற்குழு ஒப்புதலுடன் ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தர் அவர்களைக் கொண்டு வந்தார், தலைவர் கே.ஆர்.ஜி.
பிலிம் சேம்பர் எனப்படும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தி, அதன் நிர்வாக குழு, செயற்குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்வது வழக்கம். தலைவர் பதவிக்கு ஒரு ஆண்டு மலையாளம், ஒரு ஆண்டு கன்னடம், ஒரு ஆண்டு தெலுங்கு, ஒரு ஆண்டு தமிழ் என சுழற்சி முறையில் தலைவர் பதவிக்குத் தயாரிப்பாளரை கொண்டு வருவார்கள்.
இந்த முறை தமிழில் இருந்து தலைவர் வர வேண்டும் என்பதால், அவரை தேர்வு செய்து அனுப்பும் வேலையை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திடம் ஒப்படைத்திருந்தனர்.
முக்தா சீனிவாசன்
மூத்த உறுப்பினர்களான முக்தா சீனிவாசன் அவர்களும், கேயார் என்று அழைக்கப்படும் கோதண்ட ராமைய்யா அவர்களும் தலைவர் பதவியை ஏற்க விரும்பினார்கள். இருவருமே சங்கத்தின் வளர்ச்சிக்கு உதவியாக இருப்பவர்கள். இவர்களில் யாரைத் தேர்வு செய்து அனுப்புவது என்பதில் கே.ஆர்.ஜி. அவர்களுக்குக் குழப்பம் இருந்தது.
ஏற்கெனவே பிலிம் சேம்பர் தலைவர் பதவியில் முக்தா சீனிவாசன் அவர்கள் இருந்திருக்கிறார். அதனால், இந்த முறை கேயாருக்கு கொடுக்கலாம் என்று இறுதியில் முடிவு செய்தார்.
இதனால், முக்தா சீனிவாசன் அவர்கள் கோபித்துக் கொண்டு சில மாதங்கள் சங்கத்திற்கு வரவில்லை.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்தது. அதில் முதல்வராக கலைஞர் அவர்கள் பொறுப்பேற்றிருந்தார். அதனால் திரைத்துறையில் அனுபவம் உள்ள தயாரிப்பாளர் ஒருவரை பிலிம் சிட்டி தலைவராக நியமிக்க வேண்டும் என்று, முக்தா சீனிவாசன் அவர்களை நியமித்தார் கலைஞர். அதற்கு கே.ஆர்.ஜி. அவர்கள் நன்றி தெரிவித்தார்
அந்த ஆண்டு தயாரிப்பாளர் சங்கத்திலும் தேர்தல் நடைபெற்றது.  மீண்டும் கே.ஆர்.ஜி அவர்கள் தலைவராக வெற்றி பெற்றார். செயலாளர்களாக கே.எஸ்.சீனிவாசன், கே.விஜயகுமார் ஆகியோரும், துணைத் தலைவர்களாக ஆர்.பி.சௌத்திரி, ஏ.ஜி.சுப்பிரமணியம் என்று கே.ஆர்.ஜி அணியினரே வெற்றி பெற்றிருந்தனர்.
பொதுக் குழு உறுப்பினர்களுக்கு சைவம், அசைவம் என இரு வகை உணவுகள் விருந்து வைக்கப்பட்டன.
முதல் செயற்குழுக் கூட்டத்தை வெளியில் நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது. திருப்பதி செல்லலாம் என்று சிலர் தெரிவித்தனர். சீசன் நன்றாக இருக்கிறது குற்றாலம் செல்லாம் என்று பலர் தெரிவித்தனர்.
குறிப்பிட்ட நாளில் ஒரு ஏசி பெட்டி முழுவதும் உள்ள இருக்கைகளை முன்பதிவு செய்து நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர்கள் அத்தனை பேரும் ரயிலில் பயணம் செய்தார்கள்.
மறுநாள் காலை தென்காசி ரயில் நிலையத்தில் நெல்லை மாவட்ட விநியோகஸ்தர் சங்கம் சார்பில், அதன் தலைவர் சூரிய நாராயணன் அவர்கள் தலைமையில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அத்தனை தயாரிப்பாளர்களுக்கும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்கள்.
தென்காசி பாலகிருஷ்ணா திரையரங்கத்திற்கு சொந்தமான ‘தாய்பாலா கார்டன்’ குற்றாலம் செல்லும் பாதையில் இருந்தது. அங்கு அனைவரும் தங்கிட ஏற்பாடு செய்திருந்தனர்.
மெயின் அருவி, பழத்தோட்ட அருவி, ஐந்தருவி என்று மூன்று வேளையும் அருவிக் குளியல், காற்று வீசும் இடத்தில் செயற்குழு கூட்டம் என்று மூன்று நாட்கள் நடந்தன. அனைத்து தயாரிப்பாளர்களும் ஒரு குழந்தையைப் போல, சிறுவர்களைப் போல விளையாடி மகிழ்ந்த அந்த நாட்கள் மறக்க முடியாத அனுபவம்.
தயாரிப்புச் செலவு கட்டுப் படுத்துதல், வியாபார விஷயத்தில் சுதந்திரம் என்று பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டு அதை நடைமுறைப் படுத்துவது என்று முடிவானது.
அந்த முக்கிய முடிவுகளில் ஒன்று பத்திரிகை விளம்பரம் கட்டணம் மற்றும் அளவு குறைப்பது. இந்த விவரங்கள் பத்திரிகைகளுக்குக் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது. சில பத்திரிகை நிறுவனங்கள் மட்டும் அதன் பிரதிநிதிகளை அனுப்பி சந்திக்க வைத்தனர். ஆனால், முக்கிய நாளிதழ் ஒன்றில் இருந்து யாரும் வரவில்லை.
இதனால், மறுமுறை கூடிய செயற்குழு கூட்டத்தில் அந்த பத்திரிகைக்கு யாரும் விளம்பரம் கொடுக்கக் கூடாது என்று தீர்மானம் கொண்டு வந்து நடைமுறைப் படுத்தினார் தலைவர் கே.ஆர்.ஜி.
தலைவர் கே.ஆர்.ஜி.
இரண்டு தயாரிப்பாளர்கள் மட்டும் கட்டுப்பாட்டை மீறி விளம்பரம் கொடுத்தனர். ஆனால், மற்ற தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கட்டுப்பாடுகளை மதித்தனர். விளம்பரம் கொடுத்த தயாரிப்பாளர்களை அவர்கள் தனிப்பட்ட முறையில் கண்டிக்கவும் செய்தனர்.
அந்த தினசரி பத்திரிகையில் விளம்பரம் கொடுக்காவிட்டால் படம் வருவது மக்களுக்கே தெரியாமல் போய்விடும் என்று விளம்பரம் கொடுத்த தயாரிப்பாளர்கள் பேட்டி கொடுக்கவும் செய்தனர்.
சில மாதங்களுக்குப் பிறகு அந்த பத்திரிகை நிறுவனமும் தனக்கு வேண்டிய ஆட்கள் மூலம் பேச்சு வார்த்தைக்கு அனுப்பியது.
தயாரிப்பு செலவை கட்டுப்படுத்தும் நோக்கில் பெரிய படத் தயாரிப்பாளர், சிறிய படத் தயாரிப்பாளர் ஒரே அளவில் விளம்பரங்கள் வெளியிடுவது என்றும், முழுப்பக்க திரைப்பட விளம்பரங்களைத் தவிர்ப்பது, படத்தின் துவக்க விழா, இசை வெளியீட்டு விழா, படம் வெளியாகிற நாள், இருபத்தி ஐந்தாவது நாள், ஐம்பதாவது நாள், நூறாவது நாள் ஆகிய தினங்களில் மட்டும் கால் பக்க விளம்பரம், மற்ற நாட்களில் 3 x 15 அளவில்தான் விளம்பரங்கள் வெளியிடுவது என்றும் முடிவானது.
அந்தக் கட்டுபாடுகளை இரு பக்கமும் மதிப்பது என்றும் மீறுபவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கக் கூடாது என்றும் முடிவானது. பல வருட போராட்டத்திற்குப் பிறகு இந்த செயல் நடைமுறைக்கு வந்ததைப் பல தயாரிப்பாளர்கள் வரவேற்றனர்.

No comments:

Post a Comment