Saturday, April 27, 2019

03. ஒலியும் ஒளியும் புதுப்பாடலுக்கு தடை


சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் தமிழ் நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பான ‘ஒளியும் ஒலியும்’ நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. வாரம் தோறும் வெள்ளிக்கிழமை அன்று அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். அப்போது தெருவில் ஜன நடமாட்டமே இருக்காது. தெருவே வெறிச்சோடி கிடக்கும். டி.வி. முன்னால் அனைவரும் அமர்ந்து ஆர்வத்துடன் பார்க்கிற புகழ் பெற்ற நிகழ்ச்சியாக அந்நிகழ்ச்சி இருந்தது.

வாரம் தோறும் வெளியாகும் புதுப் படத்தில் இருந்து பாடல் காட்சிகள்  அதில் ஒளிபரப்பாகும் என்கிற ஆவலே அதற்கு காரணம்.

அந்தப் புதுப் பாடலை ஒளிபரப்பும் முன்பு, அந்தப் புதுப்பாடலின் படத்தின் பெயரைத் தாங்கிய ஒரு ‘போட்டோ கார்ட்’ விளம்பரம் பத்து செகண்டுக்கு ஒளிபரப்பாகும். அதற்குக் கட்டணமாக பத்தாயிரம் ரூபாய் தூர்தர்ஷன் வசூலித்துக் கொண்டிருந்தது.

அதன் கட்டணத்தை இருபதாயிரமாக உயர்த்தப் போவதாக கேள்விப்பட்ட ஒரு தயாரிப்பாளர், என்னிடம் வேதனையுடன் அதனைப் பகிர்ந்து கொண்டார். இந்தத் தகவலை, தலைவர் கே.ஆர்.ஜி. அவர்கள் கவனத்திற்குக் கொண்டு சென்றேன்.

தயாரிப்பாளரின் பாடல்கள் மூலமாக அந்த நிகழ்ச்சியில் வேறு பல விளம்பரத்தை அதிகமாகப் பெறுகிறீர்கள். அதனால், பல லட்சம் தொலைக்காட்சிக்கு வருமானம் கிடைக்கிறது.

ஒரு பாடலுக்கு பல லட்சம் செலவு செய்து நாங்கள் தயாரிக்கிறோம். அதனால், அந்தப் பாடல் ஒளிபரப்ப நீங்கள்தான் எங்களின் தயாரிப்பாளர்களுக்கு சன்மானம் வழங்க வேண்டும்.

பத்தாயிரம் கட்டணம் செலுத்தவே போராடுகிற நிலையில், இருபதாயிரம் கட்டணம் என்றால், அது தயாரிப்பாளர்களுக்குத் தாங்க முடியாத பெரிய சுமையாக இருக்கும். அதனால், கட்டணம் உயர்த்துவது பற்றி உங்கள் முடிவை மாற்றிக் கொள்ளுங்கள். அது விஷயமாக தூர்தர்ஷன் நிர்வாகத்துடன்  தயாரிப்பாளர் சங்கம் கலந்து பேசத் தயாராக இருக்கிறோம். அதற்கு ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்யுங்கள் என்று தூர்தர்ஷன் இயக்குநருக்கு ஒரு கடிதம் எழுதச் சொன்னார் தலைவர் கே.ஆர்.ஜி.

அந்தக் கடிதத்தை தூர்தர்ஷனில்  சென்று கொடுத்து வந்தேன். அதற்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. ஒரு வாரம் கழித்து இருபதாயிரம் கட்டணம் வசூலிக்கத் தொடங்கினார்கள். இது தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தார் கே.ஆர்.ஜி.

மத்திய அரசிடம் இருந்து சென்னை மண்டல தணிக்கைக் குழுவுக்கு உத்தரவிட்டு படங்கள் தணிக்கை பெற தயாரிப்பாளர் சங்கம் மூலம் வாய்ப்பைப் பெற்ற தலைவர் கே.ஆர்.ஜி., தூர்தர்ஷனின் இந்த கட்டண உயர்வால் மத்திய அரசிடம் மோதுகின்ற ஒரு சூழ்நிலைக்கு ஆளானார்.

உடனடியாக ஒரு செயற்குழுக் கூட்டத்தை ஏற்பாடு செய்யச் சொன்னார். செயற்குழு உறுப்பினர்கள் மட்டுமல்லாது அப்போது வெளியாகும் படங்களின் தயாரிப்பாளர்களையும் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மறுநாள் நடந்த அந்த அவசர செயற்குழுக் கூட்டத்தில், தொலைக்காட்சிக்குப் புதுப் பாடல்கள் கொடுப்பதில்லை என்று தீர்மானம் கொண்டு வந்தார். 

ஆரம்பத்தில் படத்திற்கு விளம்பரம் கிடைக்காதே என்று தயங்கிய சில தயாரிப்பாளர்கள், பிறகு சம்மதித்தனர். இந்தத் தகவலை உடனடியாக மீடியாக்களுக்கு தெரிவித்தார்.

அப்போது வெளியான ஒரு வசந்த கீதம்,  ஜெய்ஹிந்த், வரவு எட்டணா செலவு பத்தணா, சக்திவேல் ஆகிய படங்களின் தயாரிப்பாளர்கள் உறுதியாக இருந்தனர். நான்கு வாரங்கள் கடந்த பின்னும் தூர்தர்ஷன் நிர்வாகம் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஒளிபரப்பான பாடல்களையே திரும்ப திரும்ப ஒளிபரப்பினார்கள்.

தினமும் மாலை நேரத்தில் மட்டும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்த, ‘சன் டிவியின் தமிழ்மாலை’ சாட்டிலைட் சேனல், தயாரிப்பாளர்களின் பாடல்களுக்கு நாங்கள் பணம் தருகிறோம் என்று முன் வந்தனர்.

சன் டிவி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, செயற்குழு ஒப்புதலுடன் ஒப்பந்தம் போடப்பட்டது. வெள்ளியன்று ஒளிபரப்பாகும் ஆறு புதுப் பாடல்களுக்கு ஒரு லட்சம் என்றும், மறுமுறை ஒளிபரப்பாகும் போது ஆறாயிரம் என்றும், அடுத்த முறை ஒளிபரபாகும் போது இரண்டாயிரம் என்றும் முடிவாகி இருந்தது.

தலைவர் கே.ஆர்.ஜி., ஆலோசகர் கேயார், செயலாளர்கள் கே.எஸ்.சீனிவாசன், டி.என்.ஜானகிராமன், பொருளாளர் தரங்கை சண்முகம் போன்றோர் அந்த ஒப்பந்தத்தை உருவாக்கினார்கள்.

வெளியாகும் படங்களின் தயாரிப்பாளர்களிடம் இருந்து பாடல்களைப் பெற்று சன் தொலைக்காட்சிக்கு சங்கத்தின் மூலமாக வழங்க வேண்டிய பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார் கே.ஆர்.ஜி.

தூர்தர்ஷனில் பாடலை ஒளிபரப்பிடப்  பத்தாயிரம் ரூபாய் கட்டணமாகக் செலுத்தி வந்த தயாரிப்பாளர்கள், அவர்களது சங்கம் மூலமாக ஒரு பாடலுக்கு பத்தாயிரம் ரூபாய் பெறுகிற வாய்ப்பை பெற்றார்கள். உறுப்பினர்களுக்கு சர்வீஸ் செய்வது மூலமாக சங்கத்திற்கும் வருமானம் கிடைத்தது.

அந்த வருமானம் மூலம் உறுப்பினர்களுக்கு உதவ அறக்கட்டளை ஒன்றை உருவாக்கவும் முடிவு செய்தார் கே.ஆர்.ஜி.

No comments:

Post a Comment