Saturday, April 27, 2019

29. கே.ஆர்.ஜி.யை அதிர்ச்சியடைய வைத்த நிகழ்வு.


ஒளிப்பதிவாளர் நாக.சரவணனுடன் கங்காதரன் 
பிரபுதேவா நடிப்பில் புதியவர் ஆர்.டி.நாராயணமூர்த்தி இயக்கிய படம், ‘மனதை திருடிவிட்டாய்’. பிரபுதேவா ஜோடிகளாக கௌசல்யா, காயத்ரி ஜெயராம் இருவரும் நடித்த அந்தப் படத்தில் விவேக், வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் அதிகம் இடம்பெற்றன. முழுக்க முழுக்க ஊட்டியில் படமாக்கப்பட்ட அந்தப் படத்திற்கு ரகுநாத ரெட்டி ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். 2001 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி வெளியான இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

இந்தப் படத்தைத் தொடர்ந்து மலையாளத்தில் ஒரு படத்தைத் தயாரிக்க விரும்பினார் கே.ஆர்.ஜி. ஏற்கெனவே தனது தயாரிப்பில் மம்மூட்டி நடித்த ‘ஒளியம்புகள்’ படத்தை இயக்கிய டி.ஹரிகரன் இயக்கத்தில் ‘மயூகம்’ என்கிற படத்தை தயாரித்தார்.

புதுமுகங்கள் சைசு குரூப், மம்தா மோகன்தாஸ், சாய் குமார், நெடுமுடி வேணு, வந்தனா மேனன், மித்ரா குரியன், கலாபவன் மணி உட்பட பலர் நடித்த அந்தப் படத்திற்கு ராமச்சந்திர பாபு ஒளிப்பதிவு செய்ய, பாம்பே ரவி இசை அமைத்திருந்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது.

சொந்த வேலை காரணமாக பெங்களூர் சென்ற கே.ஆர்.ஜியின் மகன் கே.ஆர்.கங்காதரன் 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். தனது மகன் இறந்த செய்தி அறிந்து நிலைகுலைந்து போனார் கே.ஆர்.ஜி.

ஆர்..எம்.வீரப்பனுடன் கே.ஆர்.ஜி., அவரது மகன் கே.ஆர்.கங்காதரன். 
1983 ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ‘திருப்பம்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான கே.ஆர்.கங்காதரன், தந்தை கே.ஆர்.ஜி. அவர்களுக்கு உதவியாக படத்தயாரிப்பில் தொடர்ந்து பயணம் செய்தவர்.

‘பார்வதி என்னை பாரடி படத்திற்குப் பிறகு ஆறு ஆண்டுகள் படம் தயாரிக்காமல் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பதவியில் கே.ஆர்.ஜி. இருந்த போது, கங்காதரன் சும்மா இருக்கவில்லை.

மாதுரி, ராஜீவ் உட்பட பலர் நடிப்பில் ‘சீதா’ என்கிற பிராமாண்ட மெகா தொடரை சன் டிவிக்காக தயாரித்தார் கங்காதரன். அந்தத் தொடருக்கு நாக.சரவணன் ஒளிப்பதிவு செய்ய, கே.எம்.விஸ்வநாத் இயக்கினார்.

அதன் பிறகு அவரே தயாரித்து இயக்கிய மெகா தொடர் ‘அஞ்சு’. கே.ஆர்.விஜயா, ரோகினி, டி.பி.கஜேந்திரன், அனுப் குமார் உட்பட பலர் நடித்த அந்த தொடரின் பெரும் பகுதி படப்பிடிப்பு ஏலகிரி மலையில் நடைபெற்றது. தமிழில் சன் டிவியிலும், மலையாளத்தில் ஏசியா நெட் டிவியிலும், தெலுங்கு மொழியில் ஜெமினி டிவியிலும் அந்த் தொடர் ஒளிபரப்பானது. முதல் முறையாக மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் ஒளிபரப்பான தொடரை இயக்கியவர் என்கிற பாராட்டை பெற்றார் கங்காதரன். 


மேலும் விசித்திரா நடித்த சிவப்பு நிலா, பிரகதி, பாண்டியராஜன் நடித்த தாத்தா சொல்லை தட்டாதே, ராஜீவ் நடித்த இன்னும் சில வேதனைகள் ஆகிய நிகழ்ச்சிகளையும் இயக்கி உள்ளார். 

நண்பர் ஜி.சிவக்குமாருடன் இணைந்த கங்காதரன், சிவகங்கா கிரியேஷன்ஸ் என்கிற நிறுவனத்தைத் தொடங்கி ‘இன்னும் சில வேதங்கள்’ என்கிற தொடரையும் தயாரித்தார். ராஜீவ், ராகவி, மாதுரி, ரா.சங்கரன், மதன்பாப், குமரிமுத்து, பாக்யா, லதா, கே.எஸ்.ஜெயலட்சுமி, பி.கே.மூர்த்தி உட்பட பலர் நடித்த அந்த தொடரின் கதை, வசனம் எழுதி கே.எம்.விஸ்வநாத் இயக்க, நாக.சரவணன் ஒளிப்பதிவு செய்திருந்தார். சென்னை தொலைக்காட்சியின் இரண்டாவது அலைவரிசையில் ஞாயிறு தோறும் பகல் 12 மணிக்கு 13 வாரங்கள் அந்த தொடர் ஒளிபரப்பானது.

சென்னை தொலைகாட்சியின் முதல் அலைவரிசையில் ‘புதையல்வேட்டை’ என்கிற அரை மணி நேர சிறப்பு நிகழ்ச்சியையும் தயாரித்தார் கங்காதரன். கே.எம்.விஸ்வநாத் இயக்கிய அந்த நிகழ்ச்சிக்கு நாக.சரவணன் ஒளிப்பதிவு செய்திருந்தார். 

அதன் பிறகு தந்தை கே.ஆர்.ஜி. தயாரித்த ‘மின்சாரகண்ணா’ படத்தின் தயாரிப்பில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். அந்தப் படத்தில் இடம்பெற்ற “ஓ அங்கிள்...” பாடலின் ஓரு காட்சியில் விஜய்யுடன் கங்காதரனை நடிக்க வைத்திருந்தார் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார்.

பிரபு நடித்த ‘பட்ஜெட் பத்மநாபன்’, ‘மிடில்கிளாஸ் மாதவன்’, பிரபுதேவா நடித்த ‘மனதை திருடிவிட்டாய்’ ஆகிய படங்களின் தயாரிப்பிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட கங்காதரன், திடீர் என மாரடைப்பால் காலமானது கே.ஆர்.ஜி. அவர்களுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. “மோனே மோனே...” என்று அவர் கதறி அழுதது அனைவரின் நெஞ்சத்தையும் வேதனையடையச் செய்தது.

கே.ஆர்.ஜி. என்கிற கே.ராஜகோபால் 1964 ஆண்டு மே, 17-ஆம் தேதி சாந்தா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். பாலக்காட்டில் பிறந்து கோவை சூலூரில் வளர்ந்த வேலாயுதம் – வள்ளியம்மாள் தம்பதியின் இரண்டாவது மகள் சாந்தா.

கே.ஆர்.ஜி. – சாந்தா தம்பதிக்கு 1965 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 ஆம் மகனாக கங்காதரன் பிறந்தார். பத்தாம் வகுப்பு வரை படித்த கங்காதரன், அதன் பிறகு தந்தையுடன் இணைந்து படத் தயாரிப்பில் ஈடுபட்டார்.

சென்னையில் வசித்த கே.ஆர்.ராஜன் பிள்ளை – சந்திரிகா தம்பதியின் மகள் ஹரிப் ப்ரியா என்பவரை 1993 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20 ஆம் தேதி மகன் கங்காதரனுக்குத் திருமணம் செய்து வைத்தார் கே.ஆர்.ஜி.

கங்காதரன் – ஹரிப்ரியா தம்பதிக்கு கௌதம் என்கிற மகனும், மாளவிகா என்கிற மகளும் உள்ளனர்.

பி.ஏ. படித்த தனது மகள் ராதாவைத் தொழிலதிபர் ஜெயன் பிள்ளை என்பவருக்கு 1989 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் தேதி திருமணம் செய்து வைத்துள்ளார் கே.ஆர்.ஜி. மாவேனிகர நாராயண பிள்ளை – அம்மணி அம்மாள் தம்பதியின் மகன் ஜெயன் பிள்ளை.

ஜெயன் பிள்ளை – ராதா தம்பதிக்கு ராதிகா, ராகினி என இரு மகள்கள் உள்ளனர்.

No comments:

Post a Comment