Saturday, April 27, 2019

05. தயாரிப்பாளர் சங்க அறக்கட்டளைதலைவர் கே.ஆர்.ஜி.
ஆரம்பத்தில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் பெரிய வருமானம் எதுவும் கிடையாது. உறுப்பினர் சந்தா, மற்றும் படபெயர் பதிவு செய்தல் போன்ற வேலைகளுக்காக சிறிய தொகை மட்டுமே வசூல் ஆனது. அதை வைத்துக் கொண்டு வாடகை, சம்பளம் கூட கொடுக்க முடியாத நிலை இருந்தது.
செயற்குழு கூட்டம் நடத்தினால், வருகிற உறுப்பினர்களுக்குக் காப்பி வாங்கி கொடுக்க கூட முடியாத நிலை. இதைப் புரிந்து கொண்டு, ஒரு கூட்டத்திற்கு சந்திரபிரகாஷ் ஜெயின், இன்னொரு கூட்டத்திற்கு ஜெயின்ராஜ் ஜெயின், மற்றொரு கூட்டத்திற்கு நந்தகோபால் செட்டியார் என சில தயாரிப்பாளர்கள் அந்த செலவுக்கான பணத்தைக் கொடுத்து உதவினார்கள்.
இப்படி இயங்கிக் கொண்டிருந்த சங்கம், வருகிற உறுப்பினர்களுக்கெல்லாம் காபி வாங்கி கொடுக்கிற நிலைக்கு உயர்ந்தது. அதற்குத் தலைவராக இருந்த கே.ஆர்.ஜி.யும், அவருடைய நிர்வாக் குழு, மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக இருந்தன.
தயாரிப்பாளர்களிடம் இருந்து பாடல்கள் பெற்று சன் தொலைக்காட்சி, ஜேஜே டிவி, கோல்டன் ஈகில் கம்யூனிக்கேஷன், ஜெயின் டிவி, தூர்தர்ஷன் இரண்டாவது சேனலில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் முக்காபாலா, சித்ரகார், ரங்கோலி என பல நிகழ்ச்சிகளில் பாடல்கள் ஒளிபரப்பக் கொடுத்து அதன் மூலம் தயாரிப்பாளர்களுக்குக் குறைந்த பட்சம் நான்கு லட்சம் வரை வருமானம் பெற்றனர். அந்தச் சேவை மூலம் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் பணம் பெருகியது.  
தினமும் வங்கி செயல்படுவது போல சங்கத்தில் இருந்து உறுப்பினர்களுக்கு காசோலைகள் சென்று கொண்டிருந்தன.
மேனேஜர் சீனிவாசன், நிர்வாகி சுப்பாராவ், மக்கள் தொடர்பாளராக்கிய  நான், ஆபீஸ் பையன் முருகன் ஆகியோர் மட்டுமே ஆரம்பத்தில் வேலையில் இருந்தோம். காலை ஒன்பது மணி முதல் இரவு பத்து மணி வரை அலுவலகம் இயங்கியது.
நடிகர் சத்யராஜ்
வருமானம் லட்சத்தை கடந்து அரை கோடியை தொட்டபோது லட்சியத்தை அடைய ஆரம்பித்தார் தலைவர் கே.ஆர்.ஜி. தயாரிப்பாளர்களுக்கு உதவ அறக்கட்டளை அமைப்பைத் தொடங்க வேண்டும் என்பது கே.ஆர்.ஜி.யின் லட்சியம். அந்தக் கனவை நனவாக்கியது தயாரிப்பாளர் கோவிந்த் அவர்களின் மரணம்.
வில்லனாக நடித்துக் கொண்டிருந்த நடிகர் சத்யராஜை முதல் முறையாக கதாநாயகனாக நடிக்க வைத்தவர் ‘சாவி’ படத்தின் தயாரிப்பாளர் கோவிந்த். அவர் ஒரு நாள் மாலை தயாரிப்பாளர் சங்கத்திற்கு வந்திருந்தார். நண்பரான செயலாளர் டி.என்.ஜானகிராமனிடம் வெகு நேரம் பழைய கதைகளைப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீர் என மார்பு வலி வந்தது. அவரை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றார் ஜானகிராமன்.
மறுநாள் அவர் இறந்துவிட்டார் என்கிற செய்தி கிடைத்தது. இதை அறிந்து தலைவர் கே.ஆர்.ஜி. அதிர்ச்சி அடைந்தார். பிறகு கோவிந்த் அவர்களின் குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்று செயலாளர் ஜானகிராமன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அந்த உதவித் தொகையைத் தயாரிப்பாளர் சங்க பொதுக் குழு கூட்டத்தில் அறக்கட்டளை துவக்கி வைத்து உதவினார்.
பிலிம் சேம்பர் திரையரங்கில் நடந்த அந்த பொதுக் குழு கூட்டத்திற்கு  பெரும் திரளாக தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நடிகர் சத்யராஜ், தனது சார்பில் ஒரு லட்ச ரூபாய் தயாரிப்பாளர் கோவிந்து அவர்களின் குடும்பத்திற்கு உதவினார்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க அறக்கட்டளையின் அறங்காவலர்களாக திரு.கே.ஆர்.ஜி., திரு.கேயார், திரு.டி.ஆர்.ராமண்ணா ஆகியோர் பொதுக் குழுவால் தேர்வானார்கள்.
அப்போது அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தயாரிப்பாளரும் நடிகருமான எஸ்.எஸ்.சந்திரன், “நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடி சிறைக்கு சென்றார் காந்திஜி. அவருக்குத் துணையாக இருந்தார் நேருஜி. அதே போல எங்கள் தயாரிப்பாளரின் சுதந்திரத்திற்காகப் பாடுபடுகிறார் கே.ஆர்.ஜி.
எஸ்.எஸ்.சந்திரன்
உரிமை பெற செக் இழுத்து கஷ்டப்பட்டார் வ.உ.சி. அதே போல எனக்கு செக் வாங்க கஷ்டப்பட்டார் கே.ஆர்.ஜி’’ என்று பேசி, கைதட்டல்களை பெற்றார், .
எஸ்.எஸ்.சந்திரன், தன் நண்பரோடு இணைந்து ‘புருஷன் எனக்கு அரசன்’ என்கிற படத்தை தயாரித்திருந்தார். படம் வெளியாகும் போது இருவருக்கும் கருத்து முரண்பாடு ஏற்பட்டுப் பிரிந்தனர். ஓர் ஆண்டுக்குப் பிறகு தமிழக அரசு வழங்கிய மானியத் தொகையைப் பெறும் போது, இருவருக்கும் இடையே யார் அந்தப் படத்திற்குத் தயாரிப்பாளர் என்று மோதல் வெடித்தது. கடிதங்கள் அரசுக்கு அனுப்பட்டன. அதனால் அப்படத்திற்குச் செல்ல வேண்டிய காசோலை நிறுத்தி வைக்கப்பட்டது.
அப்போது அதிமுக ஆட்சியில் இருந்தது. எஸ்.எஸ்.சந்திரன், திமுக கட்சியில் இருந்தார். அதனால் கே.ஆர்.ஜி.அவர்களிடம் பிரச்சினையை சொன்னார். தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களிடம் வேறு அமைச்சர் ஒருவர் மூலமாக பேசி அந்த தொகையைப் பெற்றுதந்திருந்தார் கே.ஆர்.ஜி.
அந்த நன்றிக்காக அப்படி கே.ஆர்.ஜி. அவர்களை புகழ்ந்து பேசினார் எஸ்.எஸ்.சந்திரன்.
அன்று ஒரு செடி போல துவங்கிய தயாரிப்பாளர் சங்க அறக்கட்டளை இன்று ஆலமரம் போல வளர்ந்து, தனது உறுப்பினர்களின் நல் வாழ்க்கைக்கு உதவியாக இருந்து செயல்படுகிறது. திரு.கே.ஆர்.ஜி. அவர்கள் மறைந்தாலும் அவரது ஆசை, லட்சியம் இப்போதும் தொடர்கிறது.

No comments:

Post a Comment