Saturday, April 27, 2019

07.தயாரிப்பாளரின் திடீர் மரணம்கே.ஆர்.ஜி.
ஸ்ரீராஜ காளியம்மன் எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் சார்பில் ‘பூக்களைப் பறிக்காதீர்கள்’, ‘பூ மழை பொழிகிறது’, ‘வேலை கிடைச்சுடுச்சு’, ‘என் தங்கச்சி படிச்சவ’, ‘சாமுண்டி’, ‘பதவிபிரமாணம்’ உட்பட இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட படங்களை, மோகன் நடராஜனுடன் இணைந்து தயாரித்தவர் தரங்கை சண்முகம். தயாரிப்பு நிர்வாகியாக இருந்து தயாரிப்பாளராக உயர்ந்தவர்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் பொருளாளராக இருந்தவர். கே.ஆர்.ஜியின் மீது பற்றும் மரியாதையும் கொண்டவர். உறுப்பினர்களுக்கு காபி வாங்கவே பணம் இல்லாத சங்கத்திற்கு பொருளாளராக வந்து, லட்சக் கணக்கில் பணத்தைச் சங்கம் பெருக்கிய போது, அதைக் கண்டு பெரிதும் மகிழ்ந்தவர். உறுப்பினர்களுக்குச் சேர வேண்டிய பணத்தை உடனே கொடுக்க வேண்டும் என்று எங்கிருந்தாலும் ஓடி வந்து காசோலையில் கையெழுத்திட்டு செல்லக் கூடிய மனித நேயம் கொண்ட தயாரிப்பாளர் அவர்.
பிரபு நடிக்கும் ‘சீதனம்’ என்கிற படத்தை அப்போது தயாரிக்க இருந்தார். அந்தமானில் படப்பிடிப்பு நடத்த செல்ல முடிவு செய்திருந்தார். மாலை அந்தமான் செல்ல வேண்டிய பரபரப்பில் இருந்தவர், அந்தமான் சென்றால் திரும்பி வர ஒரு வாரம் ஆகும். அதனால், தன்னை யாரும் எதிப்பார்க்க கூடாது. சங்க உறுப்பினர்களுக்கு சேர வேண்டிய காசோலை, ஊழியர்களுக்குத் தர வேண்டிய சம்பளக் காசோலை எல்லாவற்றையும் எழுதி உடனே என் அலுவலகத்திற்கு எடுத்து வர முடியுமா?. நான் சங்க அலுவலகத்திற்கு வந்து திரும்ப முடியாத சூழலில் இருக்கிறேன் என்று தொலைபேசி மூலம் கூறினார்.
மேனேஜர் சீனிவாசனிடம் விவரத்தை சொல்லி வவுச்சர் மற்றும் காசோலைகளை எழுதி எடுத்துக் கொண்டு, மேனஜரையும் அழைத்துக் கொண்டு நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள லேக் ஏரியாவில் இருந்த ராஜகாளியம்மன் அலுவலகத்திற்கு சென்றேன்.
எங்களுக்கு காபி கொடுக்கச் சொல்லிவிட்டு வவுச்சரிலும் காசோலையிலும் மாறி மாறிக் கையெழுத்திட்டார் தரங்கை சண்முகம்.
தரங்கை சண்முகம்
அவர், அவசர அவசரமாக கையெழுத்துப் போடுவதை பார்த்துக் கொண்டே நின்றேன். திடீர் என என்னை ஏறிட்டுப் பார்த்தவர், “என்ன அப்படி பார்க்கிறே” என்று ஒரு சின்ன சிரிப்பை உதிர்த்தார்.
சரியாகப் பரிசோதிக்காமல் கையெழுத்து போடுறீங்களே? என்றேன்.
‘’நீங்கள் எல்லாம் சங்கத்தின் ஆட்கள். சங்கத்திற்காக நேரம் காலம் பார்க்காமல் உழைக்கிறீர்கள். மேனஜர் சீனிவாசன், கோவை செழியன், சித்ராலயா போன்ற நிறுவனகளில் கணக்கு எழுதி வேலை பார்த்த அனுபவம் உள்ளவர். அவர் தப்பா எழுத மாட்டார் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது’’ என்றார்.
“கே.ஆர்.ஜி. மீது உங்களுக்கு கோபம் இல்லையா சார்?” என்றேன்.
‘’சங்கம் என்றால் எல்லாம் இருக்கும் பாலா. எல்லோர் சொல்வதையும் கேட்க முடியாது. பெரும்பான்மையான உறுப்பினர்கள் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் தலைவர் எடுத்துக் கொள்வார். அவர் சங்கத்திற்கு வந்த பிறகுதான் இந்த பணம் எல்லாம். அதனால், அவர் எங்கு கையெழுத்து போடச் சொன்னாலும் கண்ணை மூடிக் கொண்டு கையெழுத்து போட வேண்டியது என்னோட வேலை’’ என்று சொன்னவர், பிறகு குனிந்து காசோலையில் கையெழுத்திட்டார்.
சங்க அறக்கட்டளை உருவான போது அதற்கான குழுவில் தாங்களும் இடம்பெறுவோம் என்று சிலர் நினைத்தனர். டி.ஆர்.ராமண்ணாவை திடீர் என கே.ஆர்.ஜி. கொண்டு வந்ததும், அவரை எதிர்த்து யாரும் பேச முடியவில்லை.  இதனால், சிலர் குழு மனப்பான்மையோடு செயல்பட்டனர். அதற்கு செயலாளர் டி.என்.ஜானகிராமன் காரணமாக இருக்கிறார் என்று தெரிந்த போது, கே.ஆர்.ஜி. அதிர்ச்சி அடைந்தார்.
“நான் படிக்காதவன். எனக்கு உதவியாக இருக்க உங்களை வைத்துக் கொண்டால் எனக்கு எதிராகவா செயல்படுகிறீர்கள்” என்று ஆத்திரம் கொண்டார் கே.ஆர்.ஜி.
உடனே செயற்குழு கூட்டத்தை கூட்டி விவாதித்தார். “ஜானகிராமன் செயலாளர் பதவியில் இருந்தால், நான் தலைவர் பதவியில் இருந்து விலகிக் கொள்கிறேன். பிரச்சினையை மடியில் காட்டிக் கொண்டு என்னால் சுதந்திரமாக வேலை செய்ய முடியாது” என்று தெரிவித்தார், கே.ஆர்.ஜி.
மேனேஜர் சீனிவாசன்
இதனால், அந்த பிரச்சினை பெரிதாக விவாதிக்கப்பட்டது. கே.பாலசந்தர் உட்பட பலர், இப்போது தயாரிப்பாளர் இருக்கிற சூழ்நிலையில் சங்கத்துக்கு கே.ஆர்.ஜி. தேவை. அதனால் கே.ஆர்.ஜி. விலகிக் கொள்கிற முடிவு கூடாது என்று கருத்து தெரிவித்தனர்
கே.ஆர்.ஜி. உறுதியாக இருந்தார். இறுதியில் ஜானகிராமனே செயலாளர் பதவியை ராஜினாமா செய்து கொள்ளும் அளவிற்கு சூழ்நிலை கொண்டு சென்றது.
இதில் சிலருக்கு கே.ஆர்.ஜி.யின் பிடிவாதம், கோபம் பிடிக்கவில்லை. இரு வேறு கருத்துக்கள் அப்போது நிலவின. அதனால்தான் தரங்கை சண்முகம் அவர்களிடம் அப்படி ஒரு கேள்வியை நான் கேட்டேன். அவரும் பதில் சொன்னார்.
காசோலைகளில் கையெழுத்துட்டு வாங்கி வந்து சங்க அலுவலகத்திற்குள் நுழையவில்லை. அதற்குள் அவருடைய அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.
பேசிக் கொண்டிருந்தவர் திடீர் என மயங்கி விழுந்து விட்டார். அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறோம் என்று
நான் கே.ஆர்.ஜி. அவர்களுக்கு இந்த தகவலைத் தெரிவித்தேன். அடுத்த சிலநிமிடங்களில் அவர் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டார் என்று மறுபடியும் செய்தி வந்தது.
திருமணம் செய்து கொள்ளாதவர் தரங்கை வி.சண்முகம். திரையுலகம்தான் தனது குடும்பம் என்பார். அதைப் புரிந்து கொண்ட கே.ஆர்.ஜி., திரையுலகமே திரண்டு வந்து அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வேண்டும் என்று விரும்பினார்.
தமிழில் படம் எடுக்கும் அனைத்து தயாரிப்பாளர்களையும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்தார்.
புரசைவாக்கம் டாக்டர் அழகப்பா சாலையில் இருந்த தரங்கை சண்முகம் வீட்டில் இருந்து ஓட்டேரி சுடுகாடு வரை மிகப் பெரிய இறுதி ஊர்வலம்.
இதுவரை அப்படி ஒரு ஊர்வலம், நட்சத்திர கூட்டத்துடன் தயாரிப்பளர்களுக்கு நடந்ததில்லை என்றனர்.
அப்படி ஒரு ஒற்றுமை அப்போது தயாரிப்பாளர்களிடம் இருந்தது. அந்த ஒற்றுமையை உருவாக்க கே.ஆர்.ஜி. அவர்கள் நிறையவே பாடுபட்டார்.

No comments:

Post a Comment