அணிந்துரை
தமிழ்த் திரைப்படத் துறையில் பத்திரிகையாளனாக, பத்திரிகைத் தொடர்பாளனாக தொடர்ந்து
செயல்பட்டு வரும் அருமைத் தம்பி பாலன், தனக்குள் ஏற்பட்ட
ஆர்வத்தின் காரணமாக திரையுலகில் நடைபெற்ற, குறிப்பாக தமிழ்த்
திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தலைவர் கே.ஆர்.ஜி.
அவர்களின் பங்களிப்பை இந்த நூலில் தொகுத்துள்ளார். அவரது முயற்சிக்கு முதலில் எனது
பாராட்டுக்கள்.
மறைந்த தலைவர் கே.ஆர்.ஜி. அவர்களைப் பற்றி எத்தனை புத்தகங்கள் வேண்டுமானாலும்
எழுதலாம். அந்தளவுக்கு திரையுலகில் அவரது சாதனைப் பணிகள் எண்ணில் அடங்காது.
தலைவர் கே.ஆர்.ஜி. அவர்கள் போர்க்குணம் படைத்தவர். பரிசுத்தமான போராட்ட வீரர்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் போராளியாகத் திகழ்ந்தவர். தயாரிப்பாளர்களைப்
பாதுகாக்கும் கேடயமாக, கவசமாக, போர்வாளாக செயல்பட்டவர்!
'தயாரிப்பாளர்கள் நலமாக இருக்க வேண்டும்' என்று
பெரிதும் விரும்புவார். 'தயாரிப்பாளர் சங்கம்
தயாரிப்பாளர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும்' என்று
சிந்திப்பார். 'சங்கத்திற்கு தனி இடம் வேண்டும்' என்று ஆசைப்பட்டார். சங்க அலுவலகத்தில் தயாரிப்பாளர் உட்கார்ந்து பேச
வேண்டும் என்று முதன் முதலில் நாற்காலி, மேஜை வாங்கினார்.
தயாரிப்பாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றித்தான் தினமும் யோசிப்பார்.
காலை, மாலை
இருவேளையும் சங்க அலுவலகத்திற்கு வந்துவிடுவார். மழை கொட்டினாலும் வெள்ளம் அலுவலகத்தைச்
சூழந்தாலும் அலுவலகத்திற்கு வந்து சேவை செய்வார். கே.ஆர்.ஜி. அவர்களின் மறைவு
தமிழ்த் திரையுலகிற்கு பெரும் இழப்பே ஆகும்.
திரையுலகில் ஒரு மாபெரும் சக்தி ஓங்கி இருந்த போது, அதனை எதிர்த்து,
தயாரிப்பாளரும் சக நிலைக்கு வர பாடுபட்டவர். திரையுலகில் அவர் இல்லாத
இடம் இன்னும் வெற்றிடமாகவே இருக்கிறது. அவர் தலைவராக இருந்த போது தயாரிப்பாளர்
சங்கத்திற்கு பொற்காலமாக இருந்தது என்றால், அது மிகையாகாது.
இன்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் எட்டு கோடி நிதி இருக்கிறது
என்றால், அதற்கு முதல் காரணம் அவர்தான். தயாரிப்பாளர்களின் குடும்பங்களுக்கு லட்சம்
லட்சமாக நிதி வாரி வாரி கொடுக்கிறோம் என்றால் அது அவர் தொடங்கி வைத்த பெரும்
பணியே!
அவருடைய ஆசி இந்த திரையுலகத்திற்கு எப்போதும் இருக்க வேண்டும் என்பதுதான் எனது
அவா!
கே.ஆர்.ஜி. அவர்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவராக இருந்த போது, அங்கு தம்பி பாலன்,
பி.ஆர்.ஓ.வாக வேலை செய்து வந்தார். அப்போது அங்கு பார்த்த
நிகழ்வுகளை இந்த நூலில் பதிவு செய்துள்ளார்.
இந்த புத்தகத்திற்குள் அன்றைய தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின்
வரலாறும் புதைந்து கிடக்கிறது. படிக்கும் போது ஒவ்வொரு பக்கத்திலும் கே.ஆர்.ஜி.
என்கிற மகத்தான ஆளுமையின் ஆன்மா நிதர்சனமாக தெரிகிறது. அவரைப் போன்ற மனிதர்களை இனி
பார்க்க முடியுமா என்பது சந்தேகம்?
தம்பி பாலனின் எழுத்து நடை படிக்க ஆர்வத்தைத் தூண்டும். அவர் எழுதிய முதல்
சிறுகதை தொகுப்பை என்னிடம் கொண்டு வந்து முதலில் காட்டி வாழ்த்துப் பெற்றார்.
‘சௌந்தர்யா’, ‘சரசு’, நினைவெல்லாம் நீ தானே’, ‘மனசுக்குள் வரலாமா’, ‘வேண்டுமடி நீ எனக்கு’,
‘குடிமகன்’, ‘மனுஷி’, ‘இணைந்த
இதயங்கள்’ என 8 நூல்களை எழுதிய பாலன்,
‘தலைவர் கே.ஆர்.ஜி.’ என்ற இந்த படைப்பை 9-வது நூலாக
வெளியிட்டுள்ளார்.
‘கோடம்பாக்கம் டுடே’ என்கிற மாத இதழை தொடங்கிய போது அந்த இதழின் முதல் பிரதியை
என்னை வெளியிட வைத்த பாலன், 'ஒத்த வீடு’ என்கிற படத்தை இயக்கிய போது அந்தப் படத்தின் இசை
வெளியீட்டு விழாவில் என்னைப் பாராட்ட வைத்தார்.
இப்போது ‘தலைவர் கே.ஆர்.ஜி.’ என்கிற இந்தப் புத்தகத்திற்கு என்னை அணிந்துரை
எழுத வைத்திருக்கிறார். பாலன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் எனது வாழ்த்தும், பாராட்டும்
எப்போதும் இருக்கும். அது இந்த படைப்புக்கும் உண்டு.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் பற்றி தெரிந்து கொள்ள இந்த நூல்
பெரிதும் உதவியாக இருக்கும். தயாரிப்பாளர்கள் இந்த நூலை பாதுகாக்க வேண்டும் என்பது
என் அவா!
கலைப்புலி எஸ்.தாணு
முன்னாள் தலைவர்
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்.
No comments:
Post a Comment