Saturday, April 27, 2019

12. திருட்டு வி.சி.டி.க்கு எதிரான முதல் நடவடிக்கை!



சாட்டிலைட் தொலைக்காட்சிகள் போட்டிப் போட்டுக் கொண்டு நல்ல கதையம்சம் உள்ள மெகா தொடர்களை காலையில் இருந்தே ஒளிபரப்ப ஆரம்பித்தார்கள். அதனால் பெண்களின் கூட்டம் தியேட்டருக்கு வருவது கணிசமாகக் குறைந்தது.
அதே போல ஒவ்வொரு சேனலும் படங்களைப் போடுவதற்காக தனி சேனல் தொடங்கி தினமும் நான்கு படங்களை ஒளிபரப்பினர்கள்.
இந்த நிலையில் புதுப் படங்கள் வெளியான மறுநாளே திருட்டு வி.சி.டி வெளியாகி பெருமளவில் வியாபாரம் நடைபெற்றது. “நீ பாத்துட்டியா? நான் பாத்துட்டேன் என்று பெருமையாகச் சொல்லும் அளவிற்கு திருட்டு விசிடி மக்களிடம் புகழ் பெற்றிருந்தது. இதனால், நாளுக்கு நாள் தியேட்டரில் படம் பார்க்க வரும் ரசிகர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைய ஆரம்பித்தது.
வெளிநாட்டு உரிமை விற்பதால்தான் இந்த திருட்டு விசிடி வருகிறது என்று சில படங்களின் வெளிநாட்டு உரிமையை நான்கு வாரம் கழித்து விற்காலாம் என்று முடிவு செய்தால், வெளிநாட்டிலும் திருட்டு வி.சி.டி.வெளியாகி அந்தப் படங்களின் வியாபாரத்திற்கு எதிராக அமைந்தது.
இதனால், திருட்டு வி.சி.டி. வாங்குவது, பார்ப்பது தவறு என்று மக்கள் நினைக்க வேண்டும். அதற்கு பெரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நினைத்தார் கே.ஆர்.ஜி.
இது குறித்து நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஜயகாந்த்துடன் கலந்து ஆலோசனை செய்தார். படம் பார்க்க கூட்டம் வரவில்லை என்றால் அரசுக்கும் கோடி கணக்கில் வரி இழப்பு ஏற்படும். அதனால் இந்த பிரச்சினையை முதல்வரிடம் கொண்டு செல்லலாம் என்றார், விஜயகாந்த்.
தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் மூலமாக முதல்வர் கலைஞர் அவர்களிடம் சந்திக்க நேரம் பெற்றுக் கோட்டைக்கு சென்று முதல்வர் கலைஞரைச் சந்தித்தனர். 
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கே.ஆர்.ஜி., தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சபை தலைவர் சி.வி.தம்பித்துரை, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.எம்.எம்.அண்ணாமலை, நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த், திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் டி.ராமானுஜம் ஆகியோர் 1998 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் தேதி தமிழக முதல் அமைச்சர் கலைஞர் அவர்களை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

 ‘பகத்சிங்’ பட திருட்டு விசிடியை காணும் முதல்வர் .
பட அதிபர்கள் ஆர்.பி.சவுத்திரி, கே.எஸ்.சீனிவாசன், கே.விஜயகுமார், கே.முரளிதரன், ஏ.ஜி.சுப்பிரமணியம், எஸ்.எஸ்.துரைராஜு, கவிதாலயா கந்தசாமி, ஏ.எல்.அழகப்பன், எஸ்.சந்திரப்பிரகாஷ் ஜெயின், கே.ராஜன், எம்.மணிவாசகம், திரையரங்கு உரிமையாளர்கள் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஜி.ஜெயக்குமார், டி.எம்.கே.பழனிச்சாமி கவுண்டர், சுந்தர் தியேட்டர் எஸ்.கண்ணப்பன்,  டி.என்.டி.ராஜா, விநியோகஸ்தர் கோவை ஜி.ஆர்.சண்முகம் ஆகியோரும் உடன் இருந்தனர்.
முதல்வர் கலைஞர் அவர்கள் மனுவை பெற்றுக் கொண்டு திரைப்படத் துறையினரின் கோரிக்கை தொடர்புடைய துறைச் செயலாளர்களுடன் கலந்து பரிசீலித்தார்.
திருட்டு விசிடி மற்றும் டிஜிட்டல் காம்பாக்ட் டிஸ்கின் மூலம் புதுப் படங்களை எந்தவித முன் அனுமதியும் இன்றி திருட்டுத்தனமாக கேபிள் டிவி மூலம் ஒளிபரப்புவதை தடுப்பதற்கென்று திருட்டு வீடியோ ஒழிப்புச் சட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது என்றும், இச்சட்டத்தின் மூலம்  திருட்டு விசிடி மற்றும் டிஜிட்டல் காம்பாக்ட் டிஸ்குகளை முற்றிலும் ஒழித்திட ஆவண செயப்படும் என்றும் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் தீவிர நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியாளர்களுக்கும், மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும் ஆணை வழங்கப்பட்டு இதுபோல் திருட்டு விசிடி மற்றும் டிஜிட்டல் காம்பாக்ட் டிஸ்கின் மூலம் உரிமையில்லாத திரைப்படங்களை ஒளிபரப்பும் கேபிள் டிவி உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தினார்.  

தமிழ்நாடு அரசின் சார்பில் செய்தி மற்றும் விளபரத்துறை அமைச்சர் வ.முல்லைவேந்தன், தலைமை செயலர் கே.ஏ.நம்பியார், சிறப்பு தலைமை செயலர் ஏ.பி.முத்துசாமி, உள்துறை செயலர் ஆர்.பூர்ணலிங்கம், வணிகவரித்துறை செயலர் எம்.ஏ.கவுரிசங்கர், செய்தி மற்றும் சுற்றுலாத்துறை செயலர் எஸ்.ராஜரத்தினம் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 
இந்த நிலையில் ஒரு நாள் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு ஒரு இளைஞர் வந்தார். அவர் கே.ஆர்.ஜி.யைச் சந்திக்க வேண்டும் என்றார். எதற்கு என்று சொன்னால்தான் சந்திக்க அனுமதி பெற்று தர முடியும் என்றேன்.
திருட்டு வி.சிடி. தயாரிக்கும் கும்பலில் வேலை செய்து வருவதாகவும், இந்தத் தொழிலில் இருந்து வெளியேறுவதாகவும், அவர்களைக் காட்டிக் கொடுக்க உதவுவதாகவும், தனக்கு வேறு தொழில் செய்து பிழைத்துக் கொள்ள உதவ வேண்டும் என்றும் அந்த இளைஞன் தெரிவித்தார். அந்த தகவலை கே.ஆர்.ஜியிடம் தெரிவித்தேன்.
அவனைப் பற்றி முழுமையாக விசாரித்த கே.ஆர்.ஜி., பிறகு முதல்வர் கலைஞர் அவர்களைத் தொடர்பு கொண்டு, இந்த விவரத்தைத் தெரிவித்தார். இதற்காகச் சிறப்புக் காவல் குழுவை ஏற்படுத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார், முதல்வர் கலைஞர்.
இரவோடு இரவாக அந்த திருட்டு வி.சி.டி. தயாரித்த குழுவையும், தயாரிக்க உதவிய கணினிப் பொருட்களையும் அள்ளிக் கொண்டு வந்தது, அந்தச் சிறப்பு காவல் குழு. ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து, மேலும் இருவரைத் தேடி வந்தனர்.
தமிழக அரசின் இந்த அதிரடி நடவடிக்கை திருட்டு வி.சி.டி தயாரிக்கும் கும்பலுக்கு பெரிய அச்சத்தை ஏற்படுத்தியது. முதல்வருக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் தமிழ்த் திரையுலகம் சார்பில் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டார் கே.ஆர்.ஜி.
இந்த நிலையில் விநியோகஸ்தர் சங்கங்கள் ஒன்றிணைந்து ஒரு புதிய வியாபார முறையை நடைமுறைப் படுத்த முடிவு செய்தனர். அந்த முடிவு இந்தத் திரையுலகில் மோதலை உருவாக்க போகிறது என்பது அப்போது யாருக்கும் தெரியாது.


No comments:

Post a Comment