Saturday, April 27, 2019

26. ரஜினிகாந்த் கால்ஷீட் கிடைத்தது.


‘பதினாறு வயதினிலே’ படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து வெற்றி பெற்ற பாரதிராஜா, அடுத்து இயக்க இருந்த ‘கிழக்கே போகும் ரயில்’ படத்திற்கும் கமல்ஹாசனை நாடினார். ஆனால், அப்போது கமல் பல படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்ததால், உடனே அவரால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. அதனால், சுதாகர், ராதிகா என்று புதுமுகங்கள் நடிக்க ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தை பாரதிராஜா இயக்கினார். அந்தப் படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

கே.ஆர்.ஜியின் விருப்பபடி ரஜினி நடிப்பில் ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தை இயக்க முடிவு செய்த இயக்குநர் பாரதிராஜா, அதற்காக ரஜினியிடம் சென்று பேசிய போது, உடனே கால்ஷீட் கொடுக்க முடியாத சூழ்நிலையை விளக்கி இருக்கிறார் ரஜினி.

அதனால், மீண்டும் கமலிடம் சென்று கதை சொல்லி ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தைத் தொடங்கினார் பாரதிராஜா. கே.ஆர்.ஜி. தயாரித்த அந்தப் படத்தில் கமலுடன் ஸ்ரீதேவி, வடிவுக்கரசி, கவுண்டமணி, ஜி.சீனிவாசன், பாக்யராஜ், உட்பட பலர் நடித்திருந்தனர்.

நிவாஸ் ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். ‘’இந்த மின்மினிக்கு’’ என்று துவங்கும் பாடலை கவிஞர் கண்ணதாசன் எழுத மலேஷியா வாசுதேவன், எஸ்.ஜானகி இருவரும் பாடி இருந்தனர். ‘’நினைவோ ஒரு பறவை’’ என்கிற பாடலை கவிஞர் வாலி எழுத, கமல்ஹாசன், எஸ்.ஜானகி இருவரும் இணைந்து பாடி இருந்தனர்.

1978 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி தணிக்கையான ‘சிகப்பு ரோஜாக்கள்’ படம் 1978 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28 ஆம் வெளியாகி  175 நாட்கள் ஓடிச் சாதனை படைத்தது.

‘சிகப்பு ரோஜாக்கள்’ படம் தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி. அவர்களுக்குப் பல வெற்றிப் படங்களை தயாரிக்க பெரும் ஊக்கமாக இருந்தது.

‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தில் ரஜினியின் கால்ஷீட் கிடைக்காமல் கமல்ஹாசன் நடிப்பில் தயாரித்த கே.ஆர்.ஜி., அடுத்து ரஜினி கதாநாயகனாக நடிக்கும் ஒரு படத்தைத் தயாரிக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டினார்.

அந்த முயற்சியின் காரணமாக அமைந்ததுதான் ‘ஜானி’.

‘முள்ளும் மலரும்’, ‘உதிரிப்பூக்கள்’ படங்கள் மூலம் தன்னை ஈர்த்த இயக்குநர் மகேந்திரன் இயக்கத்தில் ‘ஜானி’ படத்தைத் தயாரிக்கும் வாய்ப்பு கே.ஆர்.ஜி.க்கு கிடைத்தது.

தனது கே.ஆர்.ஜி. ஆர்ட் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரித்த இந்தப் படத்தில் ஜானி, வித்யாசாகர் என இரண்டு தோற்றங்களில் நடித்திருந்தார் ரஜினி. அர்ச்சனா என்கிற பாடகியாக ஸ்ரீதேவி நடிக்க, பாமா என்கிற பாத்திரத்தில் தீபா நடித்தார்.

மேலும் பிரபாகர் ரெட்டி, காஞ்சனா, சுபாஷினி, சுருளிராஜன், சாமிக்கண்ணு உட்பட பலர் நடித்த இந்தப் படத்தை அசோக்குமார் ஒளிப்பதிவில் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருந்தார், மகேந்திரன்.

இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். கவிஞர் கண்ணதாசன் எழுதிய ‘’என் வானிலே’’ என்கிற பாடலை ஜென்சி ஆன்டணி பாடி இருந்தார். கங்கைஅமரன் எழுதிய ‘’ஆசைய காத்துல’’ என்கிற பாடலை எஸ்.பி.சைலஜாவும், ‘’காற்றில் எந்தன்’’ பாடலை எஸ்.ஜானகியும், ‘’ஒரு இனிய மனது’’ பாடலை சுஜாதாவும், ‘’சென்யோரிட்டா’’ பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் பாடி இருந்தனர்.

1980 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி தணிக்கையான ‘ஜானி’ படம், 1980 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வெளியானது. இந்தப் படமும் கே.ஆர்.ஜி. அவர்களின் நிறுவனத்திற்கு ஒரு வெற்றிப் படமாக அமைந்து பாராட்டுக்களைப் பெற்று தந்தன.

ரஜினி நடிப்பில் படம் தயாரிக்க வேண்டும் என்கிற கே.ஆர்.ஜி.யின் ஆசை இந்தப் படத்தின் மூலம் நிறைவேறியது.

‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தை தொடர்ந்து மீண்டும் கமல்ஹாசனுடன் இணைந்தார் கே.ஆர்.ஜி. 

தந்தை – மகன் என கமல் இரண்டு வேடங்களில் நடித்த அந்தப் படத்திற்கு ‘கடல் மீன்கள்’ என்று பெயர் வைத்தனர்.

ஜி.என்.ரங்கராஜன் இயக்கிய அந்தப் படத்தில் கதாநாயகியாக சுஜாதா நடிக்க, மேலும் சுமன், சங்கிலிமுருகன், நாகேஷ், நிழல்கள் ரவி, கே.ஏ.தங்கவேலு, அம்பிகா உட்பட பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைக்க; என்.கே. விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் தேதி வெளியான அந்தப் படம், இந்தியிலும் மொழி மாற்றத்துடன் வெளியானது.  

No comments:

Post a Comment