Saturday, April 27, 2019

09. கலைஞருக்குப் பேனா கொடுத்த திரையுலகம்!



கலைஞர் திரைத்துறைக்கு வந்து ஐம்பது ஆண்டுகள் ஆனதால், அவரைப் பாராட்டி கௌரவிக்கும் வகையில் ஒரு பிரமாண்ட விழா நடத்த திரையுலகினர் பலர் முடிவு செய்தார்கள். அப்போது ஜெயலலிதா முதல்வராக இருந்த காரணத்தினால் சிலர் அவ்விழாவில் கலந்துகொள்ள பயந்தனர். 
‘கலைஞரின் கலையுல பொன்விழா’ என்று அவ்விழாவுக்கு பெயர் முடிவானது. பொன்விழா குழு தலைவராக ‘புரட்சிக் கலைஞர்’ விஜயகாந்த், செயலாளராக ‘புரட்சித் தமிழன்’ சத்யாராஜ், பொருளாளராக இப்ராகிம் ராவுத்தர், உறுப்பினர்களாக இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், இராமநாராயணன், தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன், நடிகர்கள் நெப்போலியன், அருண் பாண்டியன், ராதாரவி, வாகை சந்திரசேகர், பாண்டியன், தியாகு ஆகியோர் தேர்வானார்கள்.
கலைஞரின் கலையுல பொன்விழா மலர் குழு ஆசிரியர் குழுவில் கவிஞர் வாலி, வைரமுத்து, கலைமாமணி ‘பிலிம்நியூஸ்’ ஆனந்தன், பத்திரிகையாளர் சுதாங்கன், ‘தேவி’ மணி, பேராசிரியர் கி.சு.கிருஷ்ணசாமி ஆகியோரும், மலர்க்குழுவில் மக்கள் தொடர்பாளர்கள் ‘திரைநீதி’ செல்வம், ‘கிளாமர்’ கிருஷ்ணமூர்த்தி, ‘மௌனம்’ ரவி, ஓவியர் மேக்ஸ் ஆகியோர் இடம்பெற்றனர்.  
வாள் முனையைக் காட்டிலும் பேனா முனை வலிமையானது என்பார்கள். அப்படி பேனாவுக்கு சொந்தக்காரரான கலைஞர் அவர்களுக்கு ஒரு பிரமாண்ட பேனா பரிசு அளிப்பது என்றும் முடிவுவானது.
விழாக்குழு செயல்பட தி.நகரில் இருந்த விஜயகாந்த் அலுவலகத்தில் தனியாக ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. அலுவலக ஊழியர்கள் மணி, அண்ணாத்துரை, சந்தானம் ஆகியோர் உதவியாக இருந்தார்கள்.
சென்னை கடற்கரை சீரணி அரங்கில் பிரமாண்ட அரங்கு அமைத்து அங்கு 14.04.1996 அன்று விழா நடத்துவது என முடிவானது. தமிழ்த் திரையுலகினர் அனைவருக்கும் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டது. நடிகர் நடிகைகள் அனைவரும் அவர்களது காரின் மூலம் பிலிம் சேம்பர் வளாகத்திற்கு வரவழைத்து அங்கிருந்து பஸ்ஸில் சீரணி அரங்கிற்கு அழைத்துச் செல்வது என்றும்அது பாதுகாப்பாக இருக்கும் என்றும் முடிவானது.
இவ்விழாவுக்கும் டைமண்ட் பாபு அவர்கள் தலைமையில் மக்கள் தொடர்பாளர்களான நாங்கள் பலர் வேலை செய்தோம். எனக்கு மேடையில் வேலை. நடிகர் நடிகைகளைத் தவிர, வேறு யாரையும் மேடை ஏற்றக் கூடாது என்று உத்தரவு.
மேடைக்கு எதிரே கலைஞர் அவர்களின் குடும்பத்தினர்,  இந்தப் பக்கம் தி.மு.க. அரசியல் பிரமுகர்கள், அந்தப் பக்கம் பத்திரிகையாளர்கள் என எல்லோரும் வசதியாக அமர்வதற்கு இடம் ஒதுக்கி, அந்த வேலைகளை இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் செய்து கொடுத்திருந்தார்.
இவ்விழாவுக்கு நடிகர், நடிகைகள் குவிகிறார்கள் என்பதால், அலையலையாக மக்கள் கூட்டம் பெருகி கொண்டே இருந்தது. ஜன சமுத்திரத்திற்குள் பஸ்ஸில் இருந்து வந்து நட்சத்திரங்கள் இறங்கியதும், எங்கிருந்துதான் வந்ததோ ஒரு கூட்டம், தடுப்புகளை உடைத்து சாய்த்து மேடையை நோக்கி முன்னேறியது. இதனால், தள்ளு முள்ளு, நெருக்கடி, என திரைக் கலைஞர்கள் அவதிக்குள்ளானார்கள்.
நடிகர், நடிகைகளுடன் வந்த உதவியாளர் அல்லது பெற்றோர் நிற்க இடம் கிடைக்காமல் மேடை ஏற முயன்றனர். அவர்களை எவ்வளவோ தடுத்துப் பார்த்தும் கேட்கவில்லை. இதைப் பார்த்துக் கொண்டிருந்த விஜயகாந்த், “சரி விடு... அவர்கள் எங்கு நிற்பார்கள்’’ என்றார்.
நான் அவர்களையும் மேடை ஏற வழிவிட்டேன். கூட்டத்தினரை மைக்கின் மூலம் அமைதிப் படுத்திக் கொண்டிருந்த தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன்,  மேடை ஏறுபவர்களை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே ஓடிவந்து “என்ன பாலா இப்படி பண்ணிட்டே?” ’என்று சத்தம் போட்டார்.
“கேப்டன் விடச் சொன்னார்” என்று பதில் கூறியதும், அமைதியானார்.
எந்த வித அசம்பாவிதமும் பெரிதாக இல்லாமல், விழா நடந்து முடிந்தது. அந்த விழா மூலம் பாதுகாப்புடன் எப்படி விழா நடத்த வேண்டும் என்கிற அனுபவத்தைக் கற்றுக் கொண்டேன்.
1996 ஆம் ஆண்டு மத்திய ஒலிபரப்புதுறை மந்திரியாக ஜெயபால் ரெட்டி பதவி ஏற்ற போது, அவருக்கு தமிழ்த் திரைபடத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஒரு பாராட்டு விழா நடத்திக் கௌரவித்தார் கே.ஆர்.ஜி.
சென்னையில் உள்ள தாஜ் கன்னிமாரா ஹோட்டலில் நடந்த அவ்விழாவுக்கு தயாரிப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அந்த விழாவுக்கு அழைப்பிதழ் அனுப்பியது முதல், விழா முடியும் வரையிலான அனைத்து வேலைகளையும் தலைவர் கே.ஆர்.ஜி. செயலாளர் கே.விஜயகுமார் ஆகியோரின் வழி காட்டுதலில் நான் செய்து முடித்தேன். அதில் எனக்கு பாராட்டு கிடைத்தது.
அதன் பிறகு திரையுலகில் நடைபெற்ற பல விழாக்களில் நானும் விழா அமைப்பாளராக இருந்து செயல்பட்டிருக்கிறேன்.

No comments:

Post a Comment