Saturday, April 27, 2019

22. படப்பெட்டிகளுடன் திருச்சி பயணம்


தலைவர் கே.ஆர்.ஜி. 

தலைவர் கே.ஆர்.ஜி. அவர்கள் திடீர் என ஒரு நாள் அழைத்தார்.

என்ன சொல்லப் போகிறார் என்கிற எதிர்ப் பார்ப்போடு ஓடினேன்.

“இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய் பாலா’ என்று கேட்டார்.

திருவள்ளுவர் கலைக்கூடம் தயாரிக்கும் ‘கூடி வாழந்தால் கோடி நன்மை’ படத்தில் மக்கள் தொடர்பாளராகப் பணிபுரிவதை அவரிடம் தெரிவித்தேன்.
விஜய் நடித்த மின்சார கண்ணா படத்திற்கு பிறகு சுதந்திரம் என்கிற படத்தை தயாரித்திருந்தார், கே.ஆர்.ஜி.

இந்தியில் மகேஷ் பட் தயாரிப்பில் விக்ரம் பட் இயக்கத்தில் அமீர்கான், ராணி முகர்ஜி உட்பட பலர் நடித்த படம் ‘குலாம்’. 1998 ஆம் ஆண்டு வெளியாகி, பாக்ஸ்‌ ஆபீசில் இரு நூற்றி நாற்பத்தி இரண்டு கோடி வசூலித்து சாதனை படைத்த அந்தப் படத்தின் தமிழ் உரிமையை வாங்கி, ‘சுதந்திரம் என்கிற பெயரில் தயாரித்திருந்தார் கே.ஆர்.ஜி.

அந்தப் படத்தில் அர்ஜூன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ரம்பா நடித்திருந்தார். இந்தியில் வில்லனாக நடித்த சரத் சக்சேனா தமிழிலிலும் நடிக்க, ரகுவரன், ராதிகா, நாசர், விவேக், வையாபுரி, சாப்ளின் பாலு, பொன்னம்பலம் உட்பட பலர் இணைந்து நடித்திருந்தனர். ராஜ்கபூர் இயக்கிய அந்தப் படத்திற்கு எஸ்.ஏ.ராஜ்குமார் இசை அமைத்திருந்தார்.

‘முதல்வன்’ படத்திற்கு பிறகு அர்ஜுன் நடித்திருக்கும் படம் என்பதாலும், நல்ல வசூல் செய்த ‘குலாம்’ படத்தின் தமிழ்ப் பதிப்பு என்பதாலும் நல்ல விலைக்கு வியாபாரம் செய்ய விரும்பினார் கே.ஆர்.ஜி.

ஆனால், அவர் எதிர்பார்த்த அளவுக்கு விலை போகவில்லை. அதனால் சொந்தமாகப் படத்தை வெளியிடுவது என்று முடிவு செய்து, ஒவ்வொரு ஏரியாவுக்கும் தனக்கு வேண்டியவர்களை அனுப்பி வைத்தார்.

திருச்சி எரியாவுக்கு வடுகநாதன் காரில் சென்றிருக்கிறார் என்றும், படப்பெட்டிகளை எடுத்துச் சென்று அவரிடம் கொடுத்துவிட்டு, அவருக்கு உதவியாக இருந்து படத்தை வெளியிட்ட பிறகு, சென்னை திரும்ப வேண்டும் என்றும் என்னிடம் கூறினார், கே.ஆர்.ஜி.

தனியார் பஸ் ஒன்றில் ‘சுதந்திரம்’ படத்தின் ஐந்து படப்பெட்டிகளுடன் திருச்சிக்கு விரைந்தேன். சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள மாயாஸ் என்கிற ஹோட்டலுக்குச் சென்றேன். அங்கு எங்களுக்கு அறை எடுத்திருந்தார் கே.ஆர்.ஜி.

அந்த அறைக்கு சென்ற போது, ‘சித்தி’ தொடரின் படப்பிடிப்புக்காக திருச்சி வந்த போது, அந்த அறையில் தான் ராதிகா தங்கினாராம். இந்த தகவலை தெரிவித்த ஹோட்டல் ஊழியர், அந்த அறையை எனக்கு திறந்துவிட்டார்.

நான் குளித்து தயாரான போது, வடுகநாதன் அங்கு வந்து சேர்ந்தார். படப்பெட்டியில் இருந்த ஒரு ரீல் பாக்ஸை எடுத்துக் கொண்டு ஒரு விநாயகர் கோவிலுக்குச் சென்று வழிபட்டார்.

அன்று (25.02.2000) கமல் நடித்த ‘ஹேராம்’, அஜீத் நடித்த ‘முகவரி’, பிரபு நடித்த ‘தை பொறந்தாச்சு’, அர்ஜூன் நடித்த சுதந்திரம் ஆகிய நான்கு படங்களும் வெளியாகின.

திருச்சி மாரீஸ் போர்ட், கரூர் எல்லோரா, பட்டுக்கோட்டை அன்னப்பூர்ணா ஆகிய மூன்று திரையரங்குகளில் ‘சுதந்திரம்’ படம் வெளியானது. மீதி இரண்டு பெட்டிகள் அறையில் இருந்தன.

திருச்சி மாரீஸ் திரையரங்கில் பகல் காட்சிக்கு என்ன ரிசல்ட் இருந்ததோ, அதே ரிசல்ட் கரூர் எல்லோரா திரையரங்கின் மாலை காட்சிக்கும் இருந்தது. இரண்டு திரையரங்குகளுக்கும் நேரடி விசிட் செய்து இரவு கே.ஆர்.ஜி. அவர்களுக்குத் தகவல் தெரிவித்தோம்.

எல்லா ஊரிலிருந்தும் அதே ரிசல்ட் கிடைத்திருந்தது. எந்த காட்சியை நீக்கினால் நன்றாக இருக்கும் என்று சொன்னோமோ, அந்த காட்சியை எல்லா திரையரங்கிலும் நீக்க வேண்டும் என்றார்கள் என்பதையும் கே.ஆர்.ஜி. தெரிவித்தார்.

அதன்படி பிளாஷ் பேக் காட்சியை திரையிட்ட அனைத்து திரையரங்கிலும் நீக்கும் படி ஆட்களை அனுப்பினார் கே.ஆர்.ஜி. இருப்பினும், கே.ஆர்.ஜி. எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

மேலும், என்னுடன் இருந்த வடுகநாதனுக்கு உடல்நிலை சரி இல்லாமல் போய்விட்டது.

இந்த தகவலை கே.ஆர்.ஜி. அவர்களிடம் தெரிவித்த போது வேதனை அடைந்தார்.

வடுகநாதனை, அவரது சகோதரி வந்து, பட்டுக்கோட்டைக்கு அழைத்து சென்றார்.

தினத்தந்தி விளம்பரத்தில் திருச்சி எரியாவுக்கு என்னைத் தொடர்பு கொள்ளுமாறு விளம்பரம் செய்திருந்தார் கே.ஆர்.ஜி.

மறுவாரம் கும்பகோணம் காசி, மாயவரம் கோமதி, தஞ்சை ஜூபிடர் ஆகிய திரையரங்குகளில் ‘சுதந்திரம்’ படத்தை திரையிடக் காசோலைகளைப் பெற்றுக் கொண்டு படப்பெட்டியைக் கொடுத்தேன்.

வெளியாகும் புதிய படங்களைப் பின்னுக்குத் தள்ளி முன்பே திரையிட்ட திரையரங்குகளில் பாலாவின் ‘சேது படம் வசூலில் சாதனைப் படைத்துக் கொண்டிருந்தது.    


No comments:

Post a Comment