ஜி.பாலன் |
ஒவ்வொரு நாளும் எழுத அமரும் போதுதான் அந்தக் கட்டுரைக்கான தகவல்கள்
ஞாபகத்திற்கு வந்தன. என் நினைவுகளில் நீந்தி பல நிகழ்வுகளை ஞாபகப்படுத்தி
எழுதினேன். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் மக்கள் தொடர்பாளராக சில
ஆண்டுகள் வேலை பார்த்திருக்கிறேன். அப்போது நடந்த நிகழ்வுகளை எழுதும் போது அது
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க வரலாறாகவும், தலைவர் திரு கே.ஆர்.ஜி.
அவர்களின் வரலாறாகவும் அமைந்துள்ளது.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் தலைவர் கே.ஆர்.ஜி. அவர்கள் ஆற்றிய மகத்தான சேவையை
யாரும் மறந்துவிட முடியாது. அவருடைய வீர தீரமான செயல்கள் உறுப்பினர்களுக்கும்,
சங்கத்திற்கும் பயனுள்ளதாக அமைந்தன. அந்த நிகழ்வுகளை மீண்டும்
நினைத்து ஞாபகப்படுத்திப் பார்க்கக் கூடிய பதிவாக இந்த கட்டுரைகள் அமைந்துள்ளன.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தை தொடர்ந்து தென்னிந்திய
திரைப்பட வர்த்தக சபையின் (பிலிம் சேம்பர்) தலைவராகவும் திரு கே.ஆர்.ஜி. அவர்கள்
செயலாற்றி உள்ளார். அந்தத் தகவல்களையும், கே.ஆர்.ஜி. அவர்கள் தயாரித்த படங்கள் குறித்த
செய்திகள், தகவல்களையும் திரட்டிப் பதிவு செய்துள்ளேன்.
ஒருமுறை ‘தினகரன்’ நாளிதழில் வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு இயக்குநர்
சிகரம் கே.பாலசந்தர் அவர்கள் பதில் அளித்தார். அதில் ஒரு வாசகர், ‘உங்களுக்குப் பிடித்த தலைவர் யார்?’ என்கிற
கேள்விக்கு, எனக்கு பிடித்த தலைவர் ‘கே.ஆர்.ஜி’ என்று பதில்
கூறி இருந்தார்.
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தருக்குப் பிடித்த தலைவர் கே.ஆர்.ஜி. பல
தயாரிப்பாளர்களுக்கும் பிடித்த தலைவர் கே.ஆர்.ஜி. அப்படிப்பட்ட தலைவர்
கே.ஆர்.ஜியின் சாதனைகளை... வரலாற்றுச் சுவடுகளை... ‘தலைவர் கே.ஆர்.ஜி.’ என்கிற
பெயரில் வெளியிடுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
இது ஒரு சிறிய முயற்சிதான்.... தலைவர் கே.ஆர்.ஜி. அவர்களைப் புகழ
வேண்டும் என்று வெளியிடவில்லை. நிகழ்வுகளை அடுத்த தலைமுறைக்குக்
கொண்டு செல்ல வேண்டும், ஆவணப்படுத்த வேண்டும் என்கிற முனைப்புதான் இந்த முயற்சி.
வரலாற்றைச் சேமிப்பவர்களையும், வரலாற்றுச் சேமிப்புகளையும் எப்போதும் மதிக்கும் எனது
தயாரிப்பாளரும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின்
கௌரவச் செயலாளருமான திரு எஸ்.எஸ்.துரைராஜு
அவர்கள், இந்த பதிவுகளுக்கு அணிந்துரை வழங்கி, எனக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அவருக்கு எனது நன்றியையும்,
வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த பதிவுகள் குறித்த விமர்சங்களை திறந்த மனதுடன் வரவேற்கிறேன்.
என்றும் நன்றியுடன்
ஜி.பாலன்
திரைப்பட மக்கள் தொடர்பாளர்.
No comments:
Post a Comment