Saturday, April 27, 2019

25. கே.ஆர்.ஜியின் படிப்பு

நிதி நிறுவனம் தொடங்கிய போது இளம் வயது கே.ஆர்.ஜி.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தை பலமுள்ள சங்கமாக மாற்றி அமைத்த சாதனையாளர் கே.ஆர்.ஜி. இரண்டாம் வகுப்புக்கு மேல் படிக்காதவர் கே.ஆர்.ஜி., தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் முப்பதுக்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்திருக்கிறார்.

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மன்னார்காட்டில் கேசவன் பிள்ளை – தேவகி அம்மாள் தம்பதியருக்கு தாமோதரன், கோபிநாதன், ராஜகோபால் என்கிற மூன்று மகன்களும், ஜானகி என்கிற ஒரு மகளும் பிறந்தனர். அவர்களில் ராஜகோபால் என்பவர்தான், பின்னாளில் கே.ஆர்.ஜி. என்று புகழ் பெற்றார்.

தொழில் சார்ந்து கோயம்புத்தூருக்கு குடும்பம் இடம் பெயர்ந்ததால் இரண்டாம் வகுப்புக்கு மேல் படிக்கவில்லை கே.ஆர்.ஜி.

வியாபாரம், தொழில் என்று சிறு வயதிலேயே அனுபவம் பெற்றார். கோயம்புத்தூரில் உள்ள சிரியன் சர்ச் சாலையில் ஐடியல் காபி பார் என்கிற காபி கடை ஆரம்பித்தவர், பிறகு பாலக்காடு வரை அந்த காபி கடையை விரிவு படுத்தினார். கோவை ஜெயில் சாலையில், ராஜன் என்கிற ஹோட்டலை திறந்தவர், பாலக்காட்டிலும் அதனைத் தொடர்ந்தார். வியாபாரம் அமோகமாக நடைபெற்றது.

அவரிடம் பலர் உதவிகள் பெற்றனர். சிலர் அடிக்கடி கடன் வாங்கினர். அவர்களுக்கு உதவ சீட்டு விடுவது, சீட்டு பிடிப்பது, என்று அதிலும் வெற்றி கண்டவர், பிறகு ‘கே.ஆர்.ஜி. சிட்பன்ட்’ என்கிற நிறுவனத்தைத் துவங்கி, அதன் மூலம் கே.ஆர்.ஜி. என்று புகழ் பெற்றார்.

.ஜெகநாதன் தம்பதியுடன் கே.ஆர்.ஜி., சாந்தா கே.ஆர்.ஜி. 
தொழில், வியாபாரம் என்று பிசியாக இருந்தாலும், கலை, அரசியலிலும் அதிக ஈடுபாடு காட்டினார் கே.ஆர்.ஜி. அண்ணாவின் பேச்சும், எம்.ஜி.ஆரின் படங்களும் அவரை ஈர்த்தன. 

வாய்ப்பு கிடைத்தால் ஒரு நாளைக்கு நான்கு படங்கள் கூட பார்ப்பாராம். அந்தளவுக்கு திரைப்படங்கள் மீது அதிக ஈர்ப்பு உள்ளவராக கே.ஆர்.ஜி. இருந்துள்ளார்.

கோயம்புத்தூர் சினி சர்ச் ரோட்டில் இருந்த ராஜா திரையரங்கிலும் உக்கடம் நாஸ் திரையரங்கிலும், பூக்கடை அருகே இருந்த சண்முகா திரையரங்கிலும் கே.ஆர்.ஜி. பார்க்காத படமே இல்லை என்று சொல்லலாம்.

இதனால், தினம் அவருடன் அரசியல் பற்றி விவாதிக்கவும், திரைப்படங்கள் குறித்துப் பேசவும், ஒரு நட்பு வட்டம் உருவாகியது. அந்த நட்பு வட்டம்தான் அவரைத் திரையுலகிற்கும் அழைத்து வந்தது.

பாரதிராஜா இயக்குநராக அறிமுகமான ‘பதினாறு வயதினிலே’ படத்தைத் தயாரித்த ஸ்ரீஅம்மன் கிரியேஷன்ஸ் பட நிறுவனர் எஸ்.ஏ.ராஜ்கண்ணுவின் மைத்துனர் பொள்ளாச்சி ரத்தினமும், எஸ்.ஏ.ராஜ்கண்ணுவின் சகோதரர் சுப்பிரமணியும் கே.ஆர்.ஜியின் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். 

அவர்கள் இருவரும் படம் தயாரிக்க இருப்பதாகவும், அதில் நீயும் பங்குபெற வேண்டும் என்று கே.ஆர்.ஜியை திரையுலகிற்கு அழைத்துள்ளனர்.

ஜெய்சங்கர், கே.ஆர்.ஜி., அவரது மகன் கே.ஆர்.கங்காதரன். 
ஒரு ரசிகனாப் படங்களை பற்றி விமர்சித்த கே.ஆர்.ஜி., நண்பர்கள் தயாரிக்கும் படத்திற்கு நிதி உதவி செய்யத் திரையுலகிற்கு வந்தார். 

ராசி புரொடக்ஷன்ஸ் சார்பில், ‘மிட்டாய் மம்மி’ என்கிற பெயரில் உருவான அந்தப் படத்தில் ஜெய்சங்கர், கே.ஆர்.விஜயா முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க அவினாசி மணி இயக்கினார். கலைஞானம், பனசை மணி இருவரும் வசனம் எழுத வி.குமார் இசையமைத்தார். அந்தப் படம் 1976 ஆம் ஆண்டு வெளியானது.  

அதன் பிறகு பொள்ளாச்சி ரத்தினம், சுப்பிரமணி இருவருடன் இணைந்து, ‘தலைப்பிரசவம்’ என்கிற படத்தை கே.ஆர்.ஜி. தயாரித்தார். கே.ஆர்.ஜியின் இஷ்ட தெய்வமான குருவாயூரப்பன் பெயரில், குருவாயூரப்பன் புரொடக்ஷன்ஸ் என்கிற பட நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட அந்தப் படத்தில் ஜெய்சங்கர், லட்சுமி, நாகேஷ் உட்பட பலர் நடித்திருந்தனர். எம்.கிருஷ்ணன் என்பவர் இயக்கிய அந்தப் படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்தார். 
 
இந்தப் படத்திற்கு பிறகு நண்பர்கள் மூவரும் தனித்தனியாக படம் தயாரிக்க முடிவு செய்தனர்.

‘மிட்டாய் மம்மி’ படத்திற்கு பைனாஸ் செய்ய வந்து, ‘தலைப்பிரசவம்’ படத்தில் பங்குதாரராக மாறிய கே.ஆர்.ஜி. ‘ஆயிரத்தில் ஒருத்தி’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக உயர்ந்தார்.

கே.ஆர்.ஜி. பிக்சர்ஸ் என்கிற பட நிறுவனத்தை தனது மனைவி சாந்தா ராஜகோபால் பெயரில் தொடங்கி ‘ஆயிரத்தில் ஒருத்தி’ என்கிற படத்தை கே.ஆர்.ஜி. தயாரித்தார். இந்தப் படத்தில் கே.ஆர்.விஜயா, பாலாஜி, ஸ்ரீகாந்த், கமல்ஹாசன், சுஜாதா, ஜெயசுதா, சகுந்தலா, அசோகன், தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், மனோரமா உட்பட பலர் நடித்திருந்தனர்.

எஸ்.ஜெகதீசன் கதை - வசனம் எழுத, அவினாசி மணி இயக்கிய அந்தப் படத்திற்கு வி.குமார் இசை அமைத்திருந்தார். 1975 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் தேதி தணிக்கை செய்யப்பட்டு, அதே ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி ‘ஆயிரத்தில் ஒருத்தி’ படம் வெளியானது.

‘ஆயிரத்தில் ஒருத்தி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது படத்தையும் அவினாசி மணி இயக்கத்தில் தொடங்கினார் கே.ஆர்.ஜி.

‘ஜானகி சபதம்’ என்கிற பெயரில் உருவான அந்தப் படத்தில் கே.ஆர்.விஜயா, ரவிச்சந்திரன், வெண்ணிற ஆடை நிர்மலா, விஜயகுமார், அசோகன், தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், மனோரமா உட்பட பலர் நடித்தனர். பாடல்களை இயக்குநர் அவினாசி மணி, கண்ணதாசன் இருவரும் எழுத, வி.குமார் இசையமைத்திருந்தார்.

ஏராளமான நட்சத்திரங்களுடன் அதிக பொருட் செலவில் பிரமாண்டமாக உருவான ‘ஜானகி சபதம்’ படம் 1976 ஆம் ஆண்டு மார்ச் 15 - ஆம் தேதி வெளியாகி, நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதன் பிறகு ஏ.ஜெகந்நாதன் இயக்கத்தில் தேங்காய் சீனிவாசன், முத்துராமன், ஸ்ரீவித்யா, பாலாஜி, மேஜர் சுந்தர்ராஜன், பண்டரிபாய், சச்சு உட்பட பலர் நடித்த ‘அதிர்ஷ்டம் அழைக்கிறது என்ற படத்தைத் தயாரித்தார் கே.ஆர்.ஜி. கவிஞர் வாலி கதை – வசனம், பாடல்கள் எழுத, எம்.வி.குமார் இசை அமைத்திருந்தார்.  இந்தப் படம் 1976 ஆம் ஆண்டு வெளியானது.

அடுத்து 'அதிர்ஷ்டம் அழைக்கிறது' படத்துக்கு துணை இயக்குநராக  பணிபுரிந்த பாரதிராஜாவை இயக்குநராக்க முடிவு செய்துசொந்த வீடு’ என்கிற படத்தை துவங்கினார் கே. ஆர். ஜி. . ஆனால், அந்தப் படம் என்ன காரணத்தினாலோ நின்று விட்டது.


No comments:

Post a Comment