ஏ.எல்.அழகப்பன் |
இதற்காகச் சாலிகிராமம் கலைஞர் கருணாநிதி சாலையில் உள்ள ஒயிட் ஹவுஸில்
ஒரு அறை எடுத்துக் கொடுத்தார்.
திரையுலகினரிடம் ‘இராம நாராயணன் 100’ மலருக்கான கட்டுரைகள் கேட்கவும், விளம்பரம் சேகரிக்கவும் ஒரு டேரிப், வரவு - செலவு
கணக்குகள் எழுத, ரசீது - வவுச்சர் போன்ற பிரிண்ட் மேட்டர்கள்
ஏற்பாடு செய்து கொண்டிருந்தேன்.
ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் பேனரில் தனது மகன் உதயா
கதாநாயகனாக அறிமுகமான ‘திருநெல்வேலி’ படத்தைத் தயாரித்த ஏ.எல்.அழகப்பன், அடுத்து சங்கிலிமுருகன் பேனரில் ஒரு படத்தை தயாரிக்க விரும்பினார்.
முதல் படத்தில் பிரபுவுடன் உதயாவை நடிக்க வைத்த அவர், இரண்டாவது படத்தில் கார்த்திக்குடன் உதயாவை நடிக்க வைக்க விரும்பினார்.
அந்தப் படத்திற்கு இயக்குநராக டி.பி.கஜேந்திரந அவர்களைத் தேர்வு செய்த அவர்,
ஒரு தெலுங்குப் படத்தை திரையிட்டு, அந்தப்
படத்தின் உரிமையை வாங்கி தமிழில் எடுக்க ஆலோசனை செய்து கொண்டிருந்தார்.
அந்த ஆலோசனை கூட்டம், அவ்வப்போது அந்த ஒயிட் ஹவுஸ் அறையில் தான் நடைபெறும்.
கதாசிரியர் கலைஞானம் |
நான் எனது கருத்தை தெரிவித்த போது, “படம் முழுவதும் யானையை
பயன்படுத்தி எடுக்கிற கதையாக இருக்கிறது என்று தெரிவித்தவர், ராஜ்கிரண் நடித்த ‘பாசமுள்ள பாண்டியரே’ படத்தில் யானைக்கு சுளுக்கு
எடுக்கிற மாதிரி ஒரு காட்சியை படமாக்கிய போது, நான் ரொம்ப
கஷ்டபட்டேன். அதனால் யானையை வைத்து படம் முழுவதும் எடுப்பது என்பது சுலபமானது அல்ல”
என்று தெரிவித்தவர், சிறிய யோசனைக்கு பிறகு, என்னிடம் வேறு ஒரு கதையைச் சொன்னார்.
அவர் கதை சொல்லும் போதே, ஆர்வமும், சிரிப்பும், சுவராஸ்யமும், எதிர்ப்பார்ப்பும், அதிகம் இருந்தன.
கதையை கேட்டு முடித்ததும், “இந்தக் கதையை ஏன் நீங்கள் எடுக்க முயற்சிக்கவில்லை”
என்று கேட்டேன்.
‘அதை ஏன் கேக்குற பாலா’ என்று அலுத்துக் கொண்டவர், பிறகு அந்தப் படம் குறித்த பிளாஷ் பேக் சம்பவங்களை கூறினார்.
அருணாசலம் என்பவர் சொன்ன இந்த கதை அவருக்கு பிடித்துவிட, அதை சுவாரஸ்ய காட்சிகள் சேர்த்து, கே.ஆர்.ஜியிடம்
தெரிவிக்கச் சென்றிருக்கிறார்.
ராமதுரைக்கு கதை பிடித்துவிட, “இப்போது கேயார் படம் தயாரிக்கும் எண்ணத்தில்
இருக்கிறார். அவரை உடனே போய் பாருங்கள்” என்று ஆலோசனை கூறி இருக்கிறார்.
இயக்குநர் டி.பி.கஜேந்திரன் |
இப்போது சங்கிலி முருகன், ஏ.எல்.அழகப்பன் இருவரும் அழைத்து இந்த வேலையைக் கொடுத்திருப்பதால்,
இந்த முயற்சியில் இருப்பதாக என்னிடம் தெரிவித்தார்.
“கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைகிற மாதிரி, கையில் நல்ல நகைச்சுவைக் கதையை வைத்துக் கொண்டு, கதை
கேட்கிறீர்களே” என்று கூறிவிட்டு, “இந்தக் கதையை முயற்சி
செய்யுங்கள். நன்றாக இருக்கிறது” என்றேன்.
மேலும், “கே.ஆர்.ஜி. அடுத்த படம் தயாரிக்கும் முயற்சியில்
இருக்கிறார். மறுபடியும் அவரைச் சந்தித்து பேசுங்களேன்” என்றேன்.
கே.ஆர்.ஜியிடம் கதை சொல்லச் சென்றது, பிறகு ராமதுரையிடம் அங்கு கதை
சொன்னது, அப்படியே கேயாரிடம் சென்றது என எல்லாமும்
கே.ஆர்.ஜிக்கு தெரிந்துவிட்டது. அதனால் அவரிடம் அதுகுறித்து பேச முடியவில்லை
என்றார்.
‘சுதந்திரம்’ படத்திற்காக, திருச்சி சென்று வந்தது, அடுத்து
ஒரு படம் தயாரிக்க வேண்டிய கட்டாயத்தில் கே.ஆர்.ஜி. இருப்பது போன்ற தகவல்களைத் தெரிவித்து,
தயங்காமல் கே.ஆர்.ஜியைச் சந்தித்து மறுபடியும் பேசுங்கள் என்று
அவரிடம் ஆலோசனை கூறினேன்.
‘சரி, மதியம் ஆகிவிட்டது. கே.ஆர்.ஜி. சாப்பாட்டுக்கு
சென்றிருப்பார். மாலை நான்கு மணிக்கு நேரில் சென்று சந்திக்கிறேன்’ என்றேன்.
‘கண்டிப்பா போய் பாத்துட்டு வா பாலா’ என்று சொல்லி, நம்பிக்கையுடன் அடுத்த சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தார், இயக்குநர் டி.பி.கஜேந்திரன்.
கே.ஆர்.ஜி அவர்களைச் சந்தித்துவிட்டு, அறைக்கு நான் திரும்பிய போது,
என் வருகையை எதிர்நோக்கி காத்திருந்தார், இயக்குநர்
டி.பி.கஜேந்திரன்.
முப்பது படங்களுக்கு மேல் இயக்கி இருந்தும், அப்போது ஒரு புதுமுக இயக்குநருக்கான எதிர்பார்ப்பும், ஆர்வமும் அவரிடம் இருந்தன.
கே.ஆர்.ஜியிடம் சென்று டி.பி.கஜேந்திரன் நல்ல கதை வைத்திருக்கிறார்.
அந்தக் கதையை தயாரித்தால், நிச்சயமாக படம் ஓடும் என்று தெரிவித்து, அவரை எப்போது சந்திக்கிறீர்கள் என்று நான் கேட்டதற்கு, “கஜி நம்ம கிட்ட ‘பெண்கள் வீட்டின் கண்கள்’ படம்
பண்ணினவன்தான்டா... பாக்கலாம்’” என்றார்
கே.ஆர்.ஜி..
அதில் அவருக்குள் இருந்த ஈகோ எட்டிப் பார்ப்பதை என்னால் உணர
முடிந்தது.
அப்போது கேயாருக்கும் - கே.ஆர்.ஜிக்கும் இடையே சுமுகமான சூழல்
இல்லாமல் இருந்ததே அதற்குக் காரணமாக இருந்ததை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
இருப்பினும், நல்ல படைப்பு என்று வரும் போது, அதை விட்டுக் கொடுக்க கூடாது என்று எனக்கு தோன்றியது. அதை அவரிடம்
தெரிவித்தேன்.
பல ஆண்டுகள் பழக்கம். என் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கை எல்லாம்
உரிமையுடன் பேசுகிற வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருந்தது. அதனால், என் மீது அவர் ஆத்திரப்படமாட்டார் என்பது எனக்கு தெரியும்.
தயாரிப்பாளர் கேயார் |
இருப்பினும், அவரே ஆர்வம் காட்டவில்லை என்பதால், அத்துடன் நான் அங்கு இருக்கவில்லை. உடனே திரும்பிவிட்டேன்.
இதை எப்படி கஜேந்திரனிடம் சொல்வது?
அவருடைய நம்பிக்கையைச் சிதைக்க நான் தயாராக இல்லை. இருப்பினும், இவர்கள் இருவரும் சந்தித்தால், இந்த படம்
தயாராகிவிடும் என்கிற நம்பிக்கை எனக்கு அதிகமாகவே இருந்தது.
“கதையைப் பற்றியும், கதையில் இருக்கும் சுவாரஸ்யம் பற்றியும்
கே.ஆர்.ஜியிடம் தெரிவித்துவிட்டேன். அவரை நீங்களே நேரில் சென்று சந்தித்தால்,
உங்கள் இரண்டு பேருக்குமே பலன் கிடைக்கும்”” என்றேன்.
முதலில் தயங்கியவர், பிறகு “சரி” என்றார்.
No comments:
Post a Comment